November 11, 2026
TikTok மூலம் கொழும்பின் மறைந்திருக்கும் உணவு மையங்களை அடையாளம் காட்டும் ரஹா டீன்
செய்தி

TikTok மூலம் கொழும்பின் மறைந்திருக்கும் உணவு மையங்களை அடையாளம் காட்டும் ரஹா டீன்

Nov 11, 2026

கொழும்புவின் உணவு உலகம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்றுவிடுவது இல்லை. புதிய உணவகங்கள், நவீன தேநீர் விடுதிகள் மற்றும் வீடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் உணவுத் தொழில்கள் என தினமும் ஏதேனும் ஒரு புதிய சுவை இங்கு அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய புதிய சுவைகளையும் மறைந்திருக்கும் பிரத்தியேக உணவு மையங்களையும் ஏனையோர் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே கண்டறிவதில் உள்ள சுவாரஸ்யமே, உணவியல் சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்கி வரும் ரஹா டீன் என்பவரின் தேடலுக்கு பிரதான தூண்டுகோலாக அமைகிறது. ஹலால் உணவு மையங்கள் முதல் புதிதாகத் தோன்றிவரும் உணவகங்கள் வரை கொழும்புவின் சுவைமிகு இடங்களை நேரில் சென்று கண்டறிந்து, அவற்றை மக்கள் தங்கள் திரைகளில் கண்டு சுவைப்பதற்கு முன்னரே ஒரு முன்னோட்டமாக வழங்கி வருகிறார்.

தன்னைத் திரையில் வெளிப்படுத்திக் கொள்ளாமல், உணவுக்கும் அதன் பின்னணியில் இயங்கும் உணவகங்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்து இவர் தனது உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறார். கொழும்பின் சுவைகளைத் தேடி அலைவதற்கான இவருடைய ஆர்வத்தின் பின்னணி, TikTok செயலியின் பங்களிப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சுவாரஸ்யமானவை. அடிப்படையில் உணவு மீதான காதலே இவரை இந்தத் துறையை நோக்கிச் செலுத்தியுள்ளது. கொழும்பில் தரமான ஹலால் உணவுகள் கிடைக்கும் இடங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இவருடைய பயணம் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் தான் சுவைத்த உணவுகளின் படங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி, பின்னர் அது கொழும்பின் பரந்த உணவு உலகை ஆராயும் ஒரு முழுமையான பயணமாக உருவெடுத்தது. இதன்போக்கில் பல்வேறு உணவகங்கள் மற்றும் வர்த்தக முத்திரைகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.

ஒரு சுவையான உணவின் குறும்படம் அல்லது புகைப்படம், சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக உலாவுபவர்களைக் கூட தங்களது அடுத்த உணவை திட்டமிட வைத்துவிடுகிறது. அந்த வகையில் புதிய உணவகங்களையும் வீட்டு அடிப்படையிலான உணவு வணிகங்களையும் கண்டறிவதற்கும் புதிய பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் TikTok தளம் ஒரு சிறந்த பாலமாக அமைந்திருப்பதாக ரஹா கூறுகிறார். இத்தளத்தில் உள்ள ‘For You’ பக்கம், தேடல் வசதிகள் மற்றும் ‘colombofood’, ‘cafesincolombo’ போன்ற பொருத்தமான ஹேஷ்டேக்குகள் மூலமாகப் பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவு இடங்களை மிக இலகுவாகக் கண்டறிய முடிகிறது. மேலும், படைப்பாளர்களுக்கு உதவும் வகையில் தேடல் பகுப்பாய்வுக் கருவிகளும் இத்தளத்தில் காணப்படுகின்றன.

ரஹா டீன் போன்ற படைப்பாளிகளுக்கு, இந்த அம்சங்கள் உணவுப் பிரியர்களுடன் தங்களின் கண்டுபிடிப்புகளை எளிதாக இணைப்பதற்கான ஒரு வழியை வழங்குகின்றன. பொதுவான குறிச்சொற்களை மட்டும் நம்பியிருக்காமல், வீடியோவின் கருப்பொருளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துமாறு TikTok பரிந்துரைக்கிறது. படைப்பாளிகள் மக்கள் என்ன தேடுகிறார்கள் என்பதைக் கண்டறியவும், எதிர்கால உள்ளடக்கத்திற்கான யோசனைகளைப் பெறவும் இதன் Creator Search Insights கருவி உதவுகிறது.

கொழும்பின் உணவுக் காலாச்சாரம் என்பது பிரபலமான பெரிய உணவகங்களுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. பல சிறப்பான சுவைகள் சிறிய வீடுகளிலும் தெருவோரச் சிறு கடைகளிலுமே மறைந்துள்ளன. குறும்படங்கள் மூலமாக இத்தகைய சிறு வணிகர்களின் உணவுகளையும் அவர்களின் உழைப்பையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்போது, அது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதோடு, அந்தச் சிறு வணிகர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தரவும் உதவுகிறது. மறைந்திருக்கும் இத்தகைய சுவைகளை வெளிக்கொண்டுவருவதையே ரஹா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பல ஹலால் உணவு மையங்களைக் கண்டறிந்து, வெளித்தெரியாத சிறிய உணவு வணிகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அவர் விரும்புகிறார். வெளிப்படையான மற்றும் உண்மையான விமர்சனங்கள் மூலமாக மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதே தனது விருப்பம் என அவர் குறிப்பிடுகிறார். சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்கிற்காக உலாவுபவர்களை, ஒரு புதிய சுவையை நோக்கிப் பயணிக்க வைப்பதிலும், உள்ளூர் சிறு வணிகர்களுக்கு ஆதரவளிப்பதிலும் இத்தகைய படைப்பாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. ரஹா டீன் போன்ற படைப்பாளர்களின் தொடர் தேடலால், கொழும்புவின் அடுத்த சுவைமிகு அனுபவம் உங்கள் மொபைல் திரையிலேயே காத்துக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close