May 29, 2026
லங்கா பிறீமியர் லீக் 2026: ஐந்து அணிகளின் நேரடி ஒப்பந்த வீரர்கள் விபரம் அறிவிப்பு
செய்தி

லங்கா பிறீமியர் லீக் 2026: ஐந்து அணிகளின் நேரடி ஒப்பந்த வீரர்கள் விபரம் அறிவிப்பு

May 29, 2026

இலங்கையின் மிகப்பிரமாண்ட டி20 கிரிக்கெட் திருவிழாவான ‘லங்கா பிறீமியர் லீக் 2026’ (6ஆவது அத்தியாயம்) தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ வீரர்கள் வரைவு (Player Draft) நிகழ்விற்கு முன்னதாகவே, முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நட்சத்திரங்கள் அடங்கிய நேரடி ஒப்பந்தப் பட்டியலை (Pre-signed Players) லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை கொழும்பு, பல்லேகல மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. 5 பிரான்சைஸ் அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 20 லீக் போட்டிகள், தகுதிச் சுற்றுப் போட்டிள் (Qualifiers), எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 24 ஆட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

சர்வதேச டி20 அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் உள்ளூரில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு லங்கா பிறீமியர் லீக் தொடர் ஒரு சிறந்த களமாக மாறி வருகிறது என்பதை இந்தாண்டுக்கான வீரர்களின் வரைவு நிரூபித்துள்ளது.

அந்த வகையில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் வரைவிற்கு முன்னதாக அனைத்து 5 அணிகளும் நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ள உள்நாட்டு 2 வீரர்கள், சர்வதேச 2 வீரர்கள் என தலா 4 வீரர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய சிறப்பம்சமாக, இந்திய உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் விஜய் சங்கர், இம்முறை கெண்டி றோயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவரது அனுபவம் இம்முறை லங்கா பிறீமியர் லீக்கில் கெண்டி றோயல்ஸ் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

அதுமாத்திரமின்றி, 2023 அத்தியாயத்தின் சம்பியனான கண்டி அணி, இம்முறை வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மெதிவ்ஸ், மொயின் அலி மற்றும் விஜய் சங்கர் ஆகியோரை நேரடியாக ஒப்பந்தம் செய்து, சமபலமிக்க ஒரு வலுவான அடித்தாளமொன்றை உருவாக்கியுள்ள.

இம்முறை லங்கா பிறீமியர் லீக்கில் புதிய பெயருடன் களமிறங்கும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணி. சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் அசத்திய பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானை நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது. இவருடன் தென்னாப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ், இலங்கை நட்சத்திரங்களான தினேஷ் சந்திமால் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இணைந்துள்ளனர்.

லங்கா பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியனான ஜஃப்னா கிங்ஸ் அணி, பங்களாதேஷின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமட் ஆகியோரை ஒப்பந்தம் செய்து பந்துவீச்சை பலப்படுத்தியுள்ளது. இவர்களுடன் இலங்கை அணியின் நட்சத்திரங்களான பானுக ராஜபக்ஷ மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அந்த அணியில் இணைந்துள்ளனர்.

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் கொழும்பு கேப்ஸ் என்ற புதிய பெயருடன் களமிறங்கும் கொழும்பு அணியில், அவுஸ்திரேலியாவின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் பென் மெக்டெர்மோட் ஆகிய இருவரும் வெளிநாட்டு வீரர்களாக முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடியும் இணைந்துள்ளனர். 

கோல் கெலண்ட்ஸ் என்ற புதிய பெயரில் களமிறங்கும் காலி அணிக்காக இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்க ஆகிய இருவரும் விளையாடவுள்ளனர். இவர்களுடன், ஜிம்பாப்வேயின் சகலதுறை வீரர் சிகந்தர் ராசா மற்றும் தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர் ராசி வொன் டெர் டுசென் ஆகியோரை இந்த அணி நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல பேசுகையில், “இந்த சீசனில் லங்கா பிறீமியர் லீக் தொடருக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் தரம், இத்தொடரின் சர்வதேச அங்கீகாரத்தைக் காட்டுகிறது. இலங்கையின் முன்னணி வீரர்களுடன், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களும் இணைவது தொடரின் போட்டித்தன்மையை அதிகரிப்பதோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான கிரிக்கெட் விருந்தாகவும் அமையும்.” என்றார்.

இதனிடையே, ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் குறிப்பிடுகையில், “லங்கா பிறீமியர் லீக்கின் 6ஆவது அத்தியாயம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக வலுவான தொடராக அமையவுள்ளது. சர்வதேச வீரர்களும், பிரான்சைஸ் உரிமையாளர்களும் இந்த லீக் மீதும் அதன் வணிக மதிப்பு மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த தேர்வுகள் காட்டுகின்றன. லங்கா பிறீமியர் லீக் தொடரை வணிக ரீதியாகவும், தொழில்முறை நிர்வாகத் திறனிலும் உலகளவில் மிகச்சிறந்த ஒரு கிரிக்கெட் வர்த்தக நாமமாக மாற்றுவதே எங்கள் இலக்கு.” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து 5 அணிகளும் தங்களின் மீதமுள்ள வீரர்களை ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ள வீரர்கள் வரைவு மூலம் தேர்வு செய்து முழுமையான குழாத்தை இறுதி செய்யவுள்ளன. வலுவான அணிகள், விரிவடைந்து வரும் நேரடி ஒளிபரப்பு கட்டமைப்பு என இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடர் உலக டி20 கிரிக்கெட் வரைபடத்தில் இலங்கையின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close