லங்கா பிறீமியர் லீக் 2026 வீரர்கள் வரைவு நிகழ்ச்சி: விளையாட்டுத்துறை அமைச்சருக்கு IPG நிறுவனம் உத்தியோகபூர்வ அழைப்பு
இலங்கையின் முன்னணி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ‘லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026’ தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன் முக்கிய கட்டமாக, வீரர்களைத் தேர்வு செய்யும் ‘பிளேயர் டிராப்ட்’ (Player Draft) நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களிடம், ஐபிஜி (IPG) நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் அண்மையில் வழங்கினார்.
இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லங்கா பிறீமியர் லீக் 2026 தொடருக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வீரர்கள் தேர்வு நிகழ்வில், முன்னணி இலங்கை மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர். வரவிருக்கும் புதிய சீசனில் அணிகளின் பலத்தையும், வியூகங்களையும் தீர்மானிக்கும் முக்கிய களமாக இது அமையவுள்ளது.
கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு என இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட தளமாக லங்கா பிறீமியர் லீக் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. வீரர்கள், அணி உரிமையாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ள இந்தத் தொடர், இம்முறை புதிய இளம் திறமைகள் மற்றும் அனுபவமிக்க வீரர்களின் சேர்க்கையோடு மேலும் பல மடங்கு விறுவிறுப்பாக அமையவுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “லங்கா பிறீமியர் லீக் 2026 வீரர் வரைவு நிகழ்ச்சிக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களிடம் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். லங்கா பிறீமியர் லீக்கின் ஒவ்வொரு வெற்றிகரமாக அத்தியாயத்தின். கிரிக்கெட் மற்றும் வணிகரீதியான வெற்றியைத் தீர்மானிப்பது இந்த வீரர்கள் தேர்வுதான். அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடு, சர்வதேசத் தரத்திலான மிகச்சிறந்த கிரிக்கெட் தொடரை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
லங்கா பிறீமியர் லீக்கின் வீரர்கள் வரைவு எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

