ஆடம்பர விருந்தோம்பலில் புதிய புரட்சி: வாசற்கதவு வரவேற்பாளர் பணியில் பெண்களைக் அறிமுகப்படுத்தும் NÜWA
ஒரு ஆடம்பர விடுதியின் உண்மையான அனுபவம், அதன் வரவேற்பிலேயே தொடங்குகிறது. அந்த வகையில், ஆடம்பர விருந்தோம்பல் துறையில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில் (City of Dreams Sri Lanka) அமைந்துள்ள NÜWA விடுதி, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த
‘வாசற்கதவு வரவேற்பாளர்’ (Doorperson) பணியில் முதன்முறையாக பெண்களை அமர்த்தி, இலங்கை விருந்தோம்பல் வரலாற்றில் NÜWA ஒரு புதிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
இது வெறும் நுழைவுவாயிலில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மட்டுமல்ல. நவீன கால விருந்தோம்பல் சேவைக்கு ஏற்ப பெண் ஊழியர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கோடு, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா மேற்கொண்டு வரும் பரந்த மாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
விருந்தினர்கள் முதலில் சந்திக்கும் நபராக இந்த வாசற்கதவு வரவேற்பாளர்கள் உள்ளதால், விடுதியின் நுட்பமான மற்றும் நம்பகமான சேவைக்கு இவர்களே அடித்தளமிடுகிறார்கள். இந்த முக்கியப் பொறுப்பில் பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், NÜWA விடுதி பாரம்பரியக் கட்டுப்பாடுகளை உடைத்து, நவீன காலத்துக்கேற்ற மாற்றத்தை முன்னெடுத்துள்ளது.
“விருந்தோம்பல் என்பது அடிப்படையில் மனிதர்களைச் சார்ந்தது. அதில் சிறப்பான சேவையை வழங்குவது என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உரித்தானது அல்ல,” என சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் மனித வள பணிப்பாளர் சஞ்சித்த உடவிதான தெரிவித்தார். மேலும், “திறமை, தொழில்முறை மற்றும் சிறந்த அனுபவங்களை வழங்கும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இங்கு வாய்ப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. எங்களது செயல்பாட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது, இத்துறை எவ்வாறு நகர வேண்டும் என்பதைக் காட்டுகிறது.” என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் விருந்தோம்பல் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து Melco நிறுவனம் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், உள்ளூர் சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்குப் பல புதிய வேலை வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
NÜWA விடுதியில் உள்ள 113 அறைகள் மற்றும் சூட்களில் (suites) வழங்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளுக்கு, அங்குப் பணியாற்றும் ஊழியர்களே மிக முக்கிய காரணமாக அமைகின்றனர்.
‘விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்பதும், அவர்கள் வருகையின் போது வெளிப்படும் மகிழ்ச்சியைக் காண்பதுமே எனது நாளின் சிறந்த தருணம். ஒருவரின் தங்குதலைச் நேர்மறையான உணர்வோடு தொடங்க உதவுவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது,’ என NÜWA-வின் வரவேற்பாளர்களுள் ஒருவரான அஞ்சலி பகிர்ந்து கொண்டார்.
உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் சேவையை வழங்குவதற்குப் பயிற்சியும், கூட்டு முயற்சியுமே பிரதான காரணியாக உள்ளது. முதலாவது வருகை தரும் விருந்தினராக இருந்தாலும் சரி, அல்லது VIP விருந்தினராக இருந்தாலும் சரி, முதல் கணத்திலிருந்தே அவர்களை அன்போடு வரவேற்பதே NÜWA-வின் ஒரே நோக்கமாகும்.
NÜWA விடுதியில், வரவேற்பு என்பது வெறும் தங்கியிருப்பதன் ஆரம்பம் மட்டுமல்ல, அது தன்னம்பிக்கை மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான முறையில் முன்னேற்றத்தை விரும்பும் நவீன ஆடம்பர சேவைக்கான வெளிப்பாடாகும்.

