November 5, 2026
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தலைமையில் இடம்பெறும் 5 நாட்களைக் கொண்ட நீரிழிவு பரிசோதனை முகாம்
செய்தி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தலைமையில் இடம்பெறும் 5 நாட்களைக் கொண்ட நீரிழிவு பரிசோதனை முகாம்

Nov 5, 2026

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Sunshine Holdings PLC) நிறுவனத்தின் சமூக நல அமைப்பான ‘சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட்’ (Sunshine Foundation for Good), தனது ‘சுவ திவிய’ திட்டத்தின் கீழ் ஒன்பது ஹெல்த்கார்ட் (Healthguard) கிளைகளில் 5 நாட்கள் கொண்ட இலவச நீரிழிவு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தவுள்ளது. ஏதிர்வரும் நவம்பர் 9 முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டமானது, நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், அதன் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த சரியான முடிவுகளை எடுக்க உதவுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு நீரிழிவு நோய் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் பின்னணியில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 20 முதல் 79 வயதிற்குட்பட்ட சுமார் 1.6 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவதாகவும், அதில் 37.7 சதவீதமானோருக்கு நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைமையானது, எளிதில் பெறக்கூடிய பரிசோதனைகள், பொதுமக்களிடையேயான விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் பெறப்படும் மருத்துவ ஆலோசனைகளின் அவசியத்தை உணர்த்துகிறது.

இந்த ஆண்டின் உலக நீரிழிவு தினக் கருப்பொருளான ‘நீரிழிவு நோய் குறித்தான ஆரம்பகால நடவடிக்கை’ (Early action on diabetes) என்பதற்கு அமைவாகவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், அதற்கான ஆபத்துகளைக் குறைத்தல் மற்றும் சரியான உரிய சிகிச்சைகளைப் பெறுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படுகிறது. சுவ திவிய திட்டத்தின் மூலம், நீரிழிவு நோய் பற்றிய புரிதலையும், நோய் தடுப்புச் சுகாதாரத்தின் அவசியத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள 10 ஹெல்த்கார்ட் கிளைகளில் நடத்தப்பட்ட Unmask Diabetes 2025 பிரச்சாரத்தின் மூலம் சுமார் 600 நபர்கள் பயனடைந்தனர். அதில் வழங்கப்பட்ட இலவச சுகாதாரப் பரிசோதனைகளும், மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்களும், நீரிழிவு நோயைத் தடுப்பது மற்றும் அதனை முகாமைத்துவம் செய்வது குறித்தான தெளிவை மக்களுக்கு வழங்கின. அந்த வெற்றிகரமான அனுபவத்தின் தொடர்ச்சியாகவே, இந்த ஆண்டு இத்திட்டமானது 5 நாட்களுக்கு விரிவாக்கப்பட்டு, நீரிழிவு நோய் விழிப்புணர்வோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷாம் சதாசிவம் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக பாரிய வரவேற்பு கிடைக்கப்பெற்றதுடன், மக்கள் தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளவும் ஆரோக்கிய நிலையைப் புரிந்து கொள்ளவும் இத்தகைய இலகுவான வாய்ப்புகளை பெரிதும் விரும்புவதை எமக்கு உணர்த்தியது. அதன் தொடர்ச்சியாக, இந்த முறையும் பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே விழிப்புணர்வுடன் செயல்படும் வகையில் மேலும் பல வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம். நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு என்பது ஏதேனும் ஒரு நாளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படக்கூடாது. மக்கள் தங்கள் உடல்நலம் குறித்துச் சரியான முடிவுகளை எடுக்க உதவுவதும், அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதுமே சுவ திவிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சித் திட்டம் நுவரெலியா, நுகேகொடை மற்றும் கொஹுவல கிளைகளில் நவம்பர் 9 ஆம் திகதியும், ஹில் வீதி மற்றும் பிடக்கோட்டே கிளைகளில் நவம்பர் 10 ஆம் திகதியும், மாலபே மற்றும் தலவத்துகொட கிளைகளில் நவம்பர் 11 ஆம் திகதியும், எத்துல்கோட்டே மற்றும் தர்மபால மாவத்தை கிளைகளில் நவம்பர் 12 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இக்கிளைகளில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பரிசோதனைகள் இடம்பெறும். இறுதியாக, நவம்பர் 13 ஆம் திகதி கிருல வீதி கிளையில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முழுநாள் சிறப்பு முகாமும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், நீரிழிவு நோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த நல்வாழ்வை மையமாகக் கொண்ட ஒரு விரிவான அணுகுமுறையை முன்னெடுப்பதற்காக, சுகாதாரம், ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை ஆலோசனை, பெருநிறுவன நல்வாழ்வு மற்றும் உடற்பயிற்சி சார்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகளையும் ஒருங்கிணைப்பதை இந்த ஆண்டுக்கான திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட்’, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ‘சுவ திவிய’ திட்டமானது, பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சமூக அளவில் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும், தொடர்ச்சியான மக்கள் அறியும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாகவும் நீரிழிவு நோயைத் தடுத்தல், நோயை முன்கூட்டியே கண்டறிதல், நோயைச் சரியாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் பக்கவிளைவுகளைத் தடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் செயற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close