‘Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன்ஹோல்டிங்ஸ்
2023/24 நிதியாண்டில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிறந்த செயல் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாந்த விருது வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘எதிர்காலத்தை ஒளிரச் செய்யுங்கள்’ (Ignite the Future) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார சேவைகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விவசாய வணிகம் போன்ற அதன் வணிகத் துறைகளின் ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வ ஏற்பாடு செய்யப்பட்டது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், துணைத் தலைவர் விஷ் கோவிந்தசாமி, சன்ஷைன் குழுமத்தின் நிறைவேற்று அதிகாரமுடைய முக்கிய குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், 156 பேருக்குத் Merit, Excellence மற்றும் Chairman விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், 10 முதல் 20 ஆண்டுகள் வரை நிறுவனத்தின் வெற்றிக்காக உழைத்த ஊழியர்களின் விசுவாசத்தைப் பாராட்டி 89 நீண்டகால சேவை விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியிட சிறப்பு பங்களிப்புகளுக்கான 13 விருதுகளும் இங்கு வழங்கப்பட்டன. 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வெற்றியில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம் இதன்போது கருத்து தெரிவிக்கையில், “எமது நிறுவனத்தின் வெற்றிக்கு உங்களின் பங்களிப்பிற்காக முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்றைய விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். நமது ஒவ்வொரு வணிகத் துறையிலும் தங்களின் பொறுப்புகளை நன்கு உணர்ந்தவர்கள், நிறுவனத்தின் செயல்திறனுக்காக அந்தப் பொறுப்புகளை சீராக நிறைவேற்ற உழைத்துள்ளனர். கடந்த வருடம் மிகவும் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்ட நாம் எதிர்காலத்தில் இவ்வாறான சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சவால்களுக்கு மத்தியிலும் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமம் முன்னேறி வருவதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர வேண்டும். நமது வெற்றியின் பலமே நமது மனித வளம்தான். அவர்களின் பலத்தால் கடந்த நிதியாண்டில் பெரும் வெற்றியைப் பெற முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.” என தெரிவித்தார்.
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் SUN விருது வழங்கும் நிகழ்வு அதன் ஊழியர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. அங்கு, சன்ஷைன் ஊழியர்கள் தங்கள் பாடல் மற்றும் நடனத் திறன் மூலம் விருது மேடையை சுவாரஸ்யமாக்கினர், மேலும் மேடையில் தங்கள் கலைத் திறன்களிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
31 மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டில் சன்ஷைன் ஒருங்கிணைக்கப்பட்ட குழு வருவாய் 55.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்ய முடிந்தது, இது முந்தைய ஆண்டை விட 7% வளர்ச்சியைக் குறிக்கிறது. மதிப்பாய்வின் போது வரிக்குப் பிந்தைய இலாபம் 66.4% வளர்ச்சியுடன் 6 பில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் ஹெல்த்கேர் மற்றும் நுகர்வோர் பிரிவுகளின் பங்களிப்பும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.6% வளர்ச்சியுடன் 3.7 கோடி ரூபாய் வலுவான மொத்த இலாபத்தைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றியது. இந்த காலகட்டத்திற்கான மொத்த இலாப வரம்பு 31% ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 500 அடிப்படை புள்ளிகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில் சன்ஷைன் ஹெல்த்கேர் பிரிவு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்தது, மொத்த வருவாயில் 50% ஆகும். நுகர்வோர் பொருட்கள் துறை 34.8% மற்றும் விவசாய வணிகத் துறை 15% பங்களித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது.