விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய பங்காளர்களைக் கௌரவித்தது Samsung Sri Lanka
இலங்கை முழுவதும் உள்ள தனது சில்லறை விற்பனை பங்காளர்களின் திறமையைக் கௌரவிக்கும் வகையிலும், நீண்டகால வணிக உறவைக் கொண்டாடும் வகையிலும் ‘சில்லறை விற்பனையாளர்கள் மாநாடு 2026’ (Retailer Summit 2026) நிகழ்வை Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. ‘ஜோன் கீல்ஸ் ஆபீஸ் ஓட்டோமேஷன்’ (John Keells Office Automation – JKOA) மற்றும் ‘சாஃப்ட்லொஜிக் மொபைல் டிஸ்ட்ரிபியூஷன்’ (Softlogic Mobile Distribution – SMD) ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் Samsung வர்த்தக நாமத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய விற்பனையாளர்களைப் பாராட்டும் வகையில் இந்த இரண்டு நாள் மாநாடு அமைந்தது. யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரை நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த வணிகப் பங்காளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 460-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இலங்கை சந்தையில் Samsung நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறுதிசெய்யும் வலுவான கூட்டுறவை மீண்டும் வலியுறுத்தும் தளமாக இம்மாநாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக, நாடளாவிய ரீதியில் மிகச்சிறந்த விற்பனைத் திறனை வெளிப்படுத்திய 5 விற்பனைப் பங்காளர்களுக்கு ‘தேசிய விநியோகஸ்தர் சிறப்பு விருதுகள்’ (National Dealer Excellence Awards) வழங்கி கௌரவிக்கப்பட்டன. குறிப்பாக, விருது பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளுடன், குடும்பத்தினருடன் ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதியில் தங்குகின்ற சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
இதன்படி, பைசோன் மொபைல் (தனியார்) நிறுவனம், கொழும்பு (தேசிய ரீதியில் முதலிடம்), தி ஸ்மார்ட்ஃபோன் ஷாப் (தனியார்) நிறுவனம், கொழும்பு (தேசிய ரீதியில் இராண்டாமிடம்), செல்ட்ரோனிக்ஸ் (தனியார்) நிறுவனம், கொழும்பு மெட்ரோ (தேசிய ரீதியில் நான்காமிடம்), திலகவர்தன செல்லுலர், கம்பஹா (தேசிய ரீதியில் ஐந்தாமிடம்) ஆகிய 5 நிறுவனங்கள் தேசிய விநியோகஸ்தர் சிறப்பு விருதுகளை வென்றன.
தேசிய விருதுகளுக்கு மேலதிமாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் Samsung தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கொண்டு சேர்த்த சிறந்த பிராந்திய விற்பனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் Samsung நிர்வாகத்தினரின் முதன்மை உரைகள், கலை நிகழ்ச்சிகள், Samsung இன் Knox பாதுகாப்பு அம்சம் மற்றும் எளிய தவணைக்கட்டண முறைகள் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. இந்த மாநாடு வெறும் விருது வழங்கும் விழாவாக மட்டுமின்றி, வணிக உறவுகளை வலுப்படுத்தவும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் சிறந்ததொரு தளமாக அமைந்தது.

