July 31, 2026
சமர்செட் எஸ்டேட்: காலத்தால் அழியாத ஒருமைப்பாடு
செய்தி

சமர்செட் எஸ்டேட்: காலத்தால் அழியாத ஒருமைப்பாடு

Jul 31, 2026

திம்புள்ளையின் தேயிலையைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதற்காக 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நாணு-ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள Somerset, இப்பிராந்தியத்தில் எளிதில் சென்றடையக்கூடிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற மலைநாட்டு பெருந்தோட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதன் பாரம்பரியம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது: பல தலைமுறை பெருந்தோட்டக் உரிமையாளர்களைக் கடந்து நிலைத்து நிற்கும் இயந்திரங்கள் மற்றும் குடும்பங்கள், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வது மற்றும் எக்காலத்திலும் மாறாத தரக் கட்டுப்பாடு ஆகியனவாகும். சாமர்செட் என்பது கடந்த காலத்தின் எச்சம் அல்ல, மாறாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு வரலாற்றை இன்றும் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு இயங்கும் தோட்டமாகும்.

தனது அடித்தளத்தை எப்போதும் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு தேயிலைத் தோட்டம்

சாமர்செட் பெருந்தோட்டத்தின் தேயிலைச் செடிகளில் சுமார் பாதி, 19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டு வரப்பட்ட தேயிலை தாவரங்களின் வழித்தோன்றல்களான, பழமையான China Jat ரக நாற்றுகளாகும். இவை ஜனவரி முதல் மார்ச் வரையிலான மேற்கத்திய தரமான பருவக்காலத்தில் (Western quality season) தங்களின் சிறந்த சுவையையும் தரத்தையும் வழங்குகின்றன; மேலும், நாட்டில் தேயிலை அறிமுகமான ஆரம்பகாலத்தின் தனித்துவமான சுவையை இன்றும் எதிரொலிக்கும் தேயிலையை இவை உற்பத்தி செய்கின்றன.

ஆனால், இங்கு பாரம்பரியம் என்பது கடந்த காலத்திலேயே முடங்கிப் போய்விடவில்லை. மீதமுள்ள தேயிலைச் செடிகள், வேகமாக வளர்ந்து முதிர்ச்சியடைவதற்காக நெருக்கமாக நடப்பட்ட புதிய ரகங்களாகும். அதேநேரம், மெதுவாக எரிக்கப்பட்ட கரிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் Biochar எனும் மண் மேம்படுத்தி, நிலத்தில் ஈரப்பதத்தை அதிக நேரம் தக்கவைக்கவும், செயற்கை உரங்களின் தேவையைக் குறைக்கவும் உதவுகிறது. இங்குள்ள அனைத்து ஏக்கர் நிலங்களிலும் தேயிலையை பயிரிட முடியாது; சாமர்செட் பெருந்தோட்டம் அதனை ஒரு இழப்பாகக் கருதுவதை நிறுத்திவிட்டது. செங்குத்தான மற்றும் வளம் குறைந்த சரிவுகளில் இயற்கை காடுகளின் அமைப்பில் உள்நாட்டு மரங்கள் இப்போது வளர்க்கப்படுகின்றன; தேயிலை பயிரிட முடியாத நிலங்களில் வேகமாக வளரக்கூடிய மரங்கள் நடப்பட்டு, கைவிடப்பட்டு கிடந்த நிலம் வருமானம் தரும் நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

இதே சிந்தனைதான் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வரும், நாணு-ஓயா மற்றும் ஆக்ரா-ஓயா ஆற்றுப் படுகைகளை இணைக்கும் 13 கிலோமீட்டர் நீளமுள்ள பல்லுயிர் பெருக்கப் பெருவழியிலும் (Biodiversity corridor) பிரதிபலிக்கிறது. இத்திட்டம் 80 ஹெக்டேயர் காடுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், எதிர்காலத்தில் 50,000க்கும் அதிகமான உள்நாட்டு மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சாமர்செட் என்பது வெறும் தேயிலையை மட்டும் பயிரிடாமல், தனது நிலத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு துடிப்புள்ள இயற்கை நிலப்பரப்பின் அங்கமாக மாற்றக் கற்றுக்கொண்ட ஒரு தோட்டமாகும்.

தொழில்நுட்பத்தின் மூலம் பணியை மேம்படுத்துதல்

மாற்றத்திற்கான மிகத் தெளிவான சான்றை ஒருவர் அங்கு நிகழ்நேரத்தில் நேரடியாகக் காண முடியும். கள மட்டத்தில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் எடை முறைமையானது பழைய கையேடு தராசுகளை ஒழித்துள்ளது. இது கொழுந்து பறிப்பவர்களுக்கு அவர்கள் பறித்த தேயிலையின் துல்லியமான பதிவுகளை வழங்குவதோடு, நிர்வாகத்திற்கு தினசரி அறுவடை அளவுகளின் நேரடிக் காட்சியையும் வழங்குகிறது. இது தொழிலாளர்களின் வருமானம் எவ்வளவு வெளிப்படையான முறையில் கணக்கிடப்படுகிறது என்பதோடு நேரடியாகத் தொடர்புடையதாகும்.

மேகக்கணிமை அடிப்படையிலான கண்காணிப்பு முறைமையானது (Cloud-based monitoring system) கொழுந்து பறிக்கும் சுற்றுகள், உரமிடும் கால அட்டவணைகள் மற்றும் கிருமிநாசினிகளின் தாக்கம் போன்றவற்றை அவை நிகழும் போதே உடனுக்குடன் கண்காணிக்கிறது. அதேபோன்ற ஒரு முறைமை, தொழிற்சாலையினுள்ளே தேயிலை வாடுதல், உருட்டுதல், நொதித்தல், உலர்த்துதல் மற்றும் தரம் பிரித்தல் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிப்பதன் மூலம், மேற்கத்திய தரமான பருவக்காலத்தின் சவாலான வாரங்களில் மேற்பார்வையாளர்கள் தேவையான மாற்றங்களைச் செய்ய வழிவகுக்கிறது. இது தலவாக்களை பெருந்தோட்ட நிறுவனம் தனது பதினைந்து தோட்டங்களிலும் செயல்படுத்தி வரும் தொழிற்சாலை தானியங்கி மயமாக்கல் (Factory automation) திட்டத்தின் ஒரு பகுதியாகும். சாமர்செட் பெருந் தோட்டம் தனது செங்குத்தான நிலப்பகுதிகளில் உரமிடுவதற்காக ட்ரோன்களையும் (Drones) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது; இதன் மூலம் கைமுறையாகவும் டிராக்டர்கள் மூலமும் உரம் தெளிப்பதற்குப் பதிலாக, துல்லியமான வான்வழி விநியோகம் சாத்தியமாகியுள்ளது. இது வீணாவதைத் தடுப்பதுடன், கடினமான சரிவுகளில் உழைப்பைக் குறைக்கிறது, மற்றும் மண் சுருங்குதல், உரம் அடித்துச் செல்லப்படுதல் போன்ற அபாயங்களைக் குறைக்கிறது. இது இலங்கைத் தேயிலைத் துறையில் துல்லிய வேளாண்மையின் (Precision agriculture) ஆரம்பகால மற்றும் கண்ணுக்குத் தெரிந்த ஒரு அடையாளமாகும்.

கொள்வனவாளர்கள் நாடி வரும் ஒரு தர அடையாளம்

நாணு-ஓயாவில் Somerset TeaTel வர்த்தக நாமத்தி கீழ் திறக்கப்பட்டுள்ள Somerset Tea Boutique இந்தத் தோட்டத்தின் புதிய வரவாகும். இது கொழும்பு – நுவரெலியா பாதையில் பயணிப்பவர்கள் சற்று ஓய்வெடுக்கவும், தோட்டத்தின் புதிய கருப்புத் தேயிலை (Black tea), பாரம்பரிய பால் தேனீர் (Milk tea) மற்றும் தனித்துவமான தோட்டத் தேயிலைப் பொதிகளை (Single-estate packs) சுவைக்கவும் ஒரு இடத்தை வழங்குகிறது; இதன் மூலம் ஒரு சிறிய இடைவேளையை இப்பள்ளத்தாக்கின் மறக்க முடியாத நினைவாக மாற்றுகிறது. சாமர்செட்டிற்கு வரும் பார்வையாளர்கள் ஒரு தேயிலை சுற்றுப்பயணத்தை (Tea tour) அனுபவிக்க முடியும். இது அவர்கள் நேரடியாக தேயிலை பறிப்பதையும், தேயிலைச் சுவைப்பதையும் மற்றும் உற்பத்தி செயல்முறையையும் நேரில் கண்டறியும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனவே, பாரம்பரியங்கள் இன்னும் மாறாமல் இருக்கும் Ceylon Teaஇன் வரலாற்றை அறிந்து கொள்ள சாமர்செட் ஒரு சிறந்த இடமாகும். மேற்கத்திய தரமான பருவக்காலத்தில் (Western quality season), இது சர்வதேச கொள்வனவாளர்கள், குறிப்பாக ஜப்பானிய கொள்வனவாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவக்காலத்தின் புதிய தேயிலையை நேரடியாக வாங்குவதற்காக சாமர்செட்டிற்கு பயணம் செய்து சந்திக்கும் ஒரு இயற்கை சந்திப்பு புள்ளியாகவும் மாறுகிறது.

தேயிலையைப் பொறுத்தமட்டில், அதன் விற்பனைக்கு எப்போதுமே பெரிய விளம்பரங்கள் தேவைப்பட்டதில்லை. 2022 ஆம் ஆண்டில், சாமர்செட் பெருந்தோட்டம் தனது மிகச்சிறந்த தேயிலை ரகத்திற்கு ஒரு கிலோகிராமுக்கு 2,600 ரூபாய் என்ற சாதனை விலையைப் பெற்றது; இந்தச் சாதனை மார்ச் 2025 இல் முறியடிக்கப்பட்டது. அப்போது ஒரே ஒரு தொகுதி தேயிலை ஒரு கிலோகிராமுக்கு 3,050 ரூபாய் வீதம் விற்பனையானது, இது இப்பிராந்தியத்தில் இந்த வகையான தேயிலைக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த விலையாகும். அதே ஆண்டில், தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் விருதுகளில் (Tea Exporters Association Awards), ‘சிறந்த தேயிலை உற்பத்தியாளர்’ (Outstanding Tea Producer) பிரிவில் சாமர்செட் இரண்டாம் இடத்தை (Runners-Up) வென்றது. இது இப்பிராந்தியத்தின் முன்னணி உற்பத்தியாளர்களிடையே அதற்கு இருந்த தசாப்த காலப் பெருமைக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது.

அந்த நன்மதிப்பு கொழும்பையும் தாண்டி உலகெங்கும் பரவியுள்ளது. Dilmah நிறுவனம் தனது Watte Boutique மற்றும் Teamaker’s Private Reserve ஆகிய தயாரிப்புத் தொடர்களின் மூலம் சாமர்செட் தேயிலையை ஐக்கிய இராச்சியத்தில் (UK) சில்லறை விற்பனை செய்கிறது; மேலும், லண்டனின் புகழ்பெற்ற Twinings of London நிறுவனம் தனது தனித்துவமான Single-origin Ceylon தயாரிப்புத் தொடருக்காக இங்கிருந்தே தேயிலையைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சான்றளிக்கப்பட்ட மற்றும் உற்பத்திப் பின்னணியைக் கண்டறியக்கூடிய (Certified and traceable) தேயிலைக்கான ஜெர்மனியின் சந்தை விருப்பத்திற்கு சாமர்செட் மிகச்சரியாகப் பொருந்துகிறது. தனது தாய் நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பின் மூலம், சாமர்செட் தேயிலை மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் சென்றடைகிறது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை நோக்கிய பயணம்

இந்தத் தோட்டம் தேயிலைச் செடிகளுக்கு அப்பாலும் தனது நிலப்பரப்பைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தியுள்ளது. ‘TTEL சாமர்செட் ஹைட்ரோ பவர்’ (TTEL Somerset Hydro Power) மூலம் இயக்கப்படும் அதன் சொந்த சிறிய நீர்மின்நிலையம், கொத்மலை ஓயா மற்றும் நாணு-ஓயா நீர்நிலைப் பகுதிகளைப் பயன்படுத்தி 1,100 kW திறன் கொண்ட மின் கட்டமைப்பின் மூலம் 2025/26 நிதியாண்டில் 95 சதவீத இயக்கத் திறனில் 3,622,254 kWh மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. இது இந்தத் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்குவதோடு, தலவாக்கலை பெருந்தோடட நிறுவனத்தின் 87 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையின் ஒரு பகுதியாக தேசிய மின் கட்டமைப்புக்கும் (National grid) மின்சாரத்தை வழங்குகிறது. இது தேயிலை விலையில் தங்கியிராத ஒரு சுயாதீனமான வருமான ஆதாரமாகும்.

தலைமுறைகளால் அளவிடப்படும் 145 ஆண்டுகாலப் பாரம்பரியம்

சாமர்செட் தோட்டத்தில் தேயிலை பயிரிடப்படுவதற்கு முன்பு, அது ஒரு அடர்ந்த காடாகவும், சில பகுதிகளில் கோப்பி தோட்டமாகவும் இருந்தது. இந்த கோப்பி பயிரானது, ஒரு நோய் தாக்குதலால் முற்றிலும் அழியுமுன்னர் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார்களுக்கு ஒரு குறுகிய காலத்திற்கு நல்ல இலாபத்தை அளிப்பதாக உறுதியளித்திருந்தது. Loolecondera தோட்டத்தில் ஜேம்ஸ் டெய்லர் இலங்கையின் முதலாவது வணிக ரீதியான தேயிலையை பயிரிட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1880 இல் சாமர்செட் தோட்டத்தில் தேயிலை வேரூன்றியது. இது ஒட்டுமொத்த திம்புள்ளை பிராந்தியம் முழுவதிலும் ஏற்பட்ட ஒரு பெரும் விவசாய மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.

சாமர்செட் தோட்டத்தின் முதலாவது முகாமையாளரான C.M.B. Wilkins 1880 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து G.A. Talbot மற்றும் S.R. Smethurst ஆகியோர் பொறுப்பேற்றனர். இதில் ஸ்மெதர்ஸ்ட் முப்பத்திரண்டு ஆண்டுகள் இந்தத் தோட்டத்தை வழிநடத்தினார், இது பதிவுகளில் உள்ள மிக நீண்ட பதவிக்காலங்களில் ஒன்றாகும். அதன் பின்னர் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர் கைமாறியது; தனியார் கட்டுப்பாட்டிலிருந்து பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்கும், பின்னர் 1972 இல் அரசாங்க நிர்வாகத்திற்கும் சென்றது. அதன் பின்னர் 1992 இல் தனியார்மயமாக்கப்பட்டதன் மூலம் சாமர்செட் தோட்டம் தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்தது. பின்னர் இது 1998 இல் Hayleys Plantation Services நிறுவனத்தால் வாங்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த அனைத்து மாற்றங்களுக்கு மத்தியிலும், சாமர்செட் தோட்டம் தொடர்ந்து தேயிலையை உற்பத்தி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தத் தொடர்ச்சி இன்றும் தொழிற்சாலையில் வாழ்கிறது, அங்கு தினசரி பயன்பாட்டில் இருக்கும் இயந்திரங்கள் சுமார் 140 ஆண்டுகள் பழமையானவை; மேலும் காலனித்துவ காலத்துத் தோட்ட பராமரிப்பாளர்களின் பங்களாவும் (Superintendent’s bungalow) ஒரு காலத்தில் தோட்ட வாழ்க்கையின் மையமாக இருந்து, இன்றும் அதே மாறாத நிலையில் கம்பீரமாக நிற்கிறது. ஆனால், சமர்செட் தோட்டத்தின் உண்மையான பலம் அதன் மனித வளத்தில்தான் உள்ளது. கொழுந்து பறிக்கும் சில குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக இங்கு பணியாற்றி வருகின்றன; சமர்செட் தோட்டத்தின் பெயர் எங்கும் எழுதப்படுவதற்கு முன்பே, தங்களின் அசாத்திய திறமையால் அதற்குப் பெருமை சேர்த்த பெண் கொழுந்து பறிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரியம் இதுவாகும்.

இன்று, 440 நபர்கள் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். இயந்திரங்கள் அல்லது தேயிலைச் செடிகளைப் போலவே இந்த உழைப்பாளர் சமூகத் தொடர்ச்சியையும் பாதுகாப்பதற்காகத்தான் சமர்செட் தோட்டத்தின் புதிய முயற்சிகள் இன்று அமைதியாகச் செயல்பட்டு வருகின்றன. முதலாவது தேயிலைச் செடி நடப்பட்டு சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும், சமர்செட் எப்போதும் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் திகழ்கிறது: அது ஒரு இயங்கும் தோட்டம், மாறிவரும் இவ்வுலகில் இன்றும் தனது அடித்தளத்தை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டு, இன்றும் பிறருக்குச் சொல்லத் தகுந்த ஒரு உன்னதமான வரலாற்றைத் தொடர்ந்து சுமந்து செல்லும் ஒரு தோட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close