வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ந்து 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி Rotary Colombo East உடன் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்த இரத்த தான நிகழ்வு தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. சமூக நலன் மற்றும் உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக நிறுவனம் கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பு இந்நிகழ்வின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை கொழும்பு 06, காலி வீதி, 541 ஆம் இலக்க வளாகத்தில் நடைபெற்ற மேற்படி இரத்த தான நிகழ்வில் குருதி கொடையாளர்கள், தொண்டு ஊழியர்கள், வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி பணியாட்தொகுதியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‘Let’s Donate Blood – #BeAHero’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வின் முதன்மையான நோக்கம், தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்வதிலுள்ள முக்கியத்துவம் குறித்து பொது மக்களின் கவனத்தை அதிகரிப்பதோடு உயிர் காக்கும் உன்னத பணியில் அதிகமானோரை பங்கேற்கச் செய்வதாகும். 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு நித்திய கல்யாணி ஜுவலரி நிறுவனத்துக்கு தனித்துவமானதொரு தருணமாகும். தாம் சேவையாற்றும் சமுதாயத்துக்கு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் சமூகப் பொறுப்பை தமது நிறுவன விழுமியங்களின் தவிர்க்க முடியாத அங்கமாக பேணுவதற்கான அர்ப்பணிப்பு இந்த நிகழ்வின் மூலம் பிரதிபலிப்பதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக சேவைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்த பரந்தளவிலான அனுபவத்தைக் கொண்டுள்ள Rotary Colombo East வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியுடன் இணைந்து இம்முறை இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்வதில் உறுதுணையாக இருந்துள்ளது. முக்கிய சமூக மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கிடையே காணப்படும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் இந்த கூட்டிணைவின் மூலம் வெளிப்படுகின்றது. இந்நிகழ்வுக்கான அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணையினை வீரகேசரி பத்திரிகை வழங்கியது. குருதி தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே பரந்தளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்வு தொடர்பான தகவல்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கும் வீரகேசரி பத்திரிகை பெரும் பங்காற்றியது. அவசர சிகிச்சைகள், சத்திரசிகிச்சைகள் மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கு குருதி பெரிதும் தேவைப்படுகிறது. தமது வருடாந்த இரத்த தான நிகழ்வின் மூலம் தன்னார்வத்துடன் குருதி தானம் செய்தல் குறித்து மேலும் செழுமையான கலாசாரமொன்றை நாட்டில் ஏற்படுத்துவதற்கு பங்களிப்பதோடு உயிர் காப்பதற்கு சகலருக்கும் பயன்மிக்க பங்களிப்பை வழங்குவதற்கு வாய்ப்பளிப்பதே வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் எதிர்பார்ப்பாகும். இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு உறுதுணையளித்த Rotary Colombo East, வீரகேசரி, குருதி கொடையாளர்கள், தொண்டு ஊழியர்கள் மற்றும் உதவியளித்த சகலருக்கும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி நன்றி தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக இந்த மனிதாபிமான பணியை முன்னெடுத்து தனித்துவமான தடத்தை பதித்துள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ந்தும் தன்னார்வச் சேவை மற்றும் கூட்டு சமூகப் பொறுப்பை ஊக்குவிக்கும் சமூக மைய நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

