பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான தூதுவராலய அலுவலகங்கள் இலங்கையில் இல்லாமையினால் தொழில்களுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம்
இன்றளவில் மோல்டோவா, ருமேனியா, போலாந்து, சுலோவேக்கியா, லித்துவேனியா, சேர்பியா மற்றும் அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ள போதிலும் அவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது இலங்கை தொழில் விண்ணப்பதாரிகளுக்கும் வெளிநாட்டு தொழில் முகவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையில் தூதுவராலயங்கள் காணப்படாமையே அதற்கான காரணமாகும். அரச அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கத்தின் செயலாளர் மொஹமட் பாருக் மொஹமட் அர்ஷாட் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சாதாரண தொழிலாளர் வேலையிலிருந்து பொறியியலாளர் பதவி வரை பரந்துபட்ட ஏராளமான தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு விண்ணப்பிப்போருக்கு இந்தியாவுக்கு சென்று ஏற்புடைய தூதுவராலய சேவைகளை பெறுவதற்கு இரண்டு வாரங்கள் வரை அங்கு தங்கி இருக்க வேண்டியள்ளதாகவும் தெரிவித்தார்.
“இரண்டு வார காலம் இந்தியாவில் தங்கி இருப்பதற்கு கனிசமான தொகை செலவாகும். அந் நாட்டில் அமைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான தூதுவராலய அலுவலகங்களில் எப்பொழுதும் அதிக கூட்ட நெரிசல் காணப்படும். அதனால் வீசா பெறுவதற்கு காலமும் பணமும் விரயமாகும். வீசா பெற முடியாத பட்சத்தில் செலவான தொகை, தொழில் அனுமதிப்பத்திரத்துக்கு ஏற்புடைய நாடுகளின் முகவர் நிறுவனங்களுக்கு செலுத்திய தொகையை மீள பெற முடியாது. இறுதியில் தொழில் விண்ணப்பதாரியும் தொழில் முகவர் நிறுவனங்களும் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படும் நிலையே காணப்படுகிறது. தொழில் விண்ணப்பதாரியினதும் தொழில் முகவர் நிறுவனங்களினதும் நலனையும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையையும் கவனத்தில் கொண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான தூதுவராலய வசதிகளையோ வீசா தொடர்பான தரகு நிறுவனமான VFS நிலையங்களையோ இலங்கையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 2017 ஆம் ஆண்டிலிருந்து பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு அமைச்சிடம் கோரியுள்ள போதிலும் இதுவரை சாதகமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதற்கு, விருப்பமின்றியேனும் அவ்வாறான நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதை தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் வைக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடி தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி உரிய தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்களின் தலையீட்டை எதிர்பார்க்கின்றோம்.” என ஜனாப் அர்ஷாட் மேலும் தெரிவித்தார்.