அரசு ஊழியர்களிடையே மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க
JKCG Auto நிறுவனம், BOC மற்றும் SLIC நிறுவனங்களுடன் கைகோர்ப்பு
இலங்கையில் BYD மற்றும் DENZA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சி.ஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனம், அரச ஊழியர்களிடையே புதிய சக்தி வாகனங்களின் (NEV) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இலங்கை வங்கி (BOC) மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (SLIC) ஆகியவற்றுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
2026 மே 4 முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டமானது, ஒருங்கமைக்கப்பட்ட நிதி வசதிகள், காப்புறுதிச் சேவைகள் மற்றும் உரிமையாளர் ஆதரவு பொறிமுறைகள் ஊடாக, அரச ஊழியர்கள் புதிய சக்தி வாகனங்களை (NEVs) இலகுவாகவும், கட்டுப்படியாகும் விலையிலும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறையைச் சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் வாய்ப்பளிக்கும் இத்திட்டமானது, தூய்மையான போக்குவரத்து விருப்பங்களை நோக்கிய ஒரு படிப்படியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, கைத்தொழில் துறை மற்றும் தேசிய நிறுவனங்களுக்கு இடையே முன்னெடுக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைப் பிரதிபலிக்கின்றது.
இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, JKCG Auto நிறுவனம் தனது BYD மற்றும் DENZA வாகன வரிசைகளுக்கு அறிமுக விலைச் சலுகைகள், வீடுகளில் சார்ஜ் செய்யும் வசதிகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளது. இவற்றுடன் இணைந்து, இலங்கை வங்கியின் ஊடாக வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையிலான குத்தகை வசதிகளும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரத்தியேக காப்புறுதித் திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆதரவும் அரச ஊழியர்களுக்குக் கிடைக்கவுள்ளன.
இந்தச் சலுகையானது புதிய சக்தி வாகனங்களுக்கான மாற்றத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இது பங்களிப்பு வழங்கும் ஒவ்வொரு நிறுவனத்தினதும் நிலையான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க அமைந்திருப்பதுடன், அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
இது தொடர்பில் JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், “பசுமைப் போக்குவரத்து நோக்கிய ஒரு பயனுள்ள தேசிய மாற்றத்தை நாம் முன்னெடுக்க வேண்டுமாயின், புதிய சக்தி வாகனங்கள் எளிதில் அணுகக்கூடியதாகவும், நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியாக உள்ளோம். எமது சேவை வலையமைப்பு மற்றும் சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகளை நாடளாவிய ரீதியில் விரிவாக்கம் செய்வது அந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்,”என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைவதன் மூலம், இலங்கையின் வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் அரச துறையினரை இந்த மாற்றத்தை நோக்கி வலுப்படுத்த முடியும். செலவு குறைந்த போக்குவரத்தை வழங்குதல், வலுசக்தி செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் எரிபொருள் இறக்குமதி மீதான தங்கியிருப்பதைக் குறைத்தல் ஆகிய பலன்கள் நாட்டிற்கும் அதன் பொருளாதார மீளெழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மிக முக்கியமானவையாகும்,” என்றார்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வாகனங்களை மிக எளிதாகச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் காப்புறுதித் தீர்வுகளின் ஊடாக இத்திட்டத்திற்கு மேலதிக ஆதரவு வழங்கப்படுகின்றது.
இந்தக் கூட்டாண்மை குறித்து இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (அபிவிருத்தி கடன் மற்றும் கிளைக் கடன் பிரிவு – II) திரு. பி. கே. குருசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் முதல் சுதேசிய நிதி நிறுவனம் என்ற ரீதியில், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை மக்கள் எளிதில் அணுகுவதற்கு வழிவகுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றோம். இப்புதிய கூட்டணியானது, மாறிவரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்பவும், அனைவரும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலுமான கட்டமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்க எமக்கு வழிவகுக்கின்றது,” எனக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டாண்மை குறித்து இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவுக்கான தலைமை அதிகாரி திரு. ஆசிரி விக்ரமாராச்சி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் மின்சார வாகனக் கட்டமைப்பின் (EV ecosystem) வளர்ச்சியை ஆதரிப்பதில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உறுதியாக உள்ளதுடன், இந்தக் கூட்டணியானது அந்த அர்ப்பணிப்பின் ஒரு தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தத் துறையினரின் தேவைகளைத் துல்லியமாக நிவர்த்தி செய்யும் வகையிலும், வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் நம்பிக்கையூட்டும் அனுபவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது காப்புறுதிச் சேவைகளை நாம் வடிவமைத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டாண்மையானது வாகனத் துறை சார்ந்த நிபுணத்துவம், நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி உதவி ஆகியவற்றை ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், புதிய சக்தி வாகனங்களின் பயன்பாட்டை மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்க வழிவகுக்கின்றது. வாகனங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் முறைப்படியான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் ஊடாக, இலங்கையில் தூய்மையான மற்றும் சவால்களைத் தாங்கக்கூடிய ஒரு போக்குவரத்துத் துறையைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இச்செயற்திட்டம் வலுசேர்க்கின்றது.

