மின்சார வாகன சந்தையில் புதிய மைல்கல்: ஜப்பானில் ‘RACCO’ மின்சார காரை அறிமுகப்படுத்தியது BYD
ஜப்பானின் போட்டி நிறைந்த வாகன சந்தைக்குள் நுழைவதற்காக BYD நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனது முதல் மாதிரியான ‘RACCO’ மின்சார வாகனத்தை BYD நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் முழுவதும் நடைபெற்ற பல நிகழ்வுகள் மூலம் இந்த அறிமுகம் இடம்பெற்றதுடன், இதன் மூலம் BYD நிறுவனம் ஜப்பானின் ‘கெய் கார்’ (Kei car) சிறிய வாகனப் பிரிவுக்குள் உத்தியோகபூர்வமாக காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்நிகழ்வில் BYD குழுமத்தின் துணைத் தலைவர் லியூ ஷுயெலியாங், BYD ஜப்பான் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவுத் தலைவர் அட்சுகி டோஃபுகுஜி, RACCO திட்டத் தலைவர் யாங் புயி மற்றும் ஜப்பான் திட்டமிடல் தலைவர் ஹிரோஹிதே தகாவா ஆகியோர் கலந்துகொண்டு புதிய வாகனத்தைத் திரைநீக்கம் செய்தனர்.
ஜப்பானிய வாடிக்கையாளரின் அன்றாடப் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள BYD நிறுவனத்தின் RACCO வாகனம், அதன் பாதுகாப்பு, பரந்த இடவசதி மற்றும் சௌகரியம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களால் பயனர்களின் உண்மையான தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதை இந்நிறுவனம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜப்பானிய சந்தையில் BYD வர்த்தக நாமத்தின் விழிப்புணர்வும், செல்வாக்கும் மேலும் அதிகரித்துள்ளன.
வெளிநாட்டுச் சந்தையொன்றின் கடுமையான தரநிலைகளை மையமாகக் கொண்டு BYD நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் வாகனம் ‘RACCO’ ஆகும். அத்துடன், ஜப்பானின் வலிமையான கெய் கார் விதிகளுக்கு அமைவாக ஒரு வெளிநாட்டு வாகன உற்பத்தியாளரால் பெருமளவில் தயாரிக்கப்பட்ட முதல் முழுமையான மின்சார வாகனமும் இதுவேயாகும். கெய் கார் என்பது ஜப்பானுக்கே உரித்தான ஒரு தனித்துவமான வாகனப் பிரிவாகும். இது என்ஜின் அளவு, ஆற்றல் மற்றும் வாகன பரிமாணங்கள் குறித்த திட்டவட்டமான விதிகளுக்கு உட்பட்டது. ஜப்பானின் புதிய வாகன விற்பனையில் சுமார் 40% பங்களிப்பை இது வகிப்பதால், நாட்டின் மிக முக்கியமான வாகனப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், BYD நிறுவனம் தனது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களைப் பயன்படுத்தி, ஜப்பானின் கெய் கார் விதிகள், வீதி நிலைமைகள் மற்றும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப RACCO வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் சவாலான வாகனப் பிரிவுக்கு ஏற்றவாறு, வாகனத்தின் கட்டமைப்பு, பேட்டரி அமைப்பு, மின்சார இயக்கம், சேசிஸ் (chassis) மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தையும் மேம்படுத்தி, உலகின் மிகச்சவாலான வாகனப் பிரிவுக்கு ஏற்ற துல்லியத்துடன் இந்த வாகனத்தை BYD உருவாக்கியுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அறிமுகமானது, ஜப்பானின் மிகப்பெரிய வாகனப் பிரிவில் BYD காலடி எடுத்து வைப்பதைக் குறிப்பதோடு, சிறிய ரக மின்சார வாகனங்களுக்கான அதன் உலகளாவிய மூலோபாயத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது. மேலும், வெறும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் முறையிலிருந்து விலகி, உள்ளூர் தேவைகளுக்கேற்ற ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் உள்ளூர் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை முன்னெடுக்கும் நோக்கில் BYD-இன் உலகளாவிய அணுகுமுறை பரிணமித்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
இது குறித்து ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “துல்லியம், செயல்திறன் மற்றும் இடவசதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை எதிர்பார்க்கும் ஜப்பானின் திட்டவட்டமான ‘கெய் கார்’ தரநிலைகளுக்கு ஏற்பவே RACCO வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் சிறியதாகவும், உட்புறத்தில் விசாலமாகவும் இருக்கும் இந்த சிறப்பம்சம் இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் மிகப்பொருத்தமாக அமையும். எனவே, RACCO மாதிரியை அல்லது இலங்கைச் சந்தைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட அதன் ஒரு பதிப்பை இங்குள்ள BYD வாகன வரிசையில் எவ்வாறு இணைப்பது என்பது குறித்தும், அந்த அனுபவத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான சரியான தருணம் குறித்தும் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்,” என குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் ஜப்பானிய உள்நாட்டுச் சந்தை வாகனங்களுக்கு நீண்டகாலமாகவே பெருமளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, கெய் கார் பிரிவில் BYD காலடி எடுத்து வைத்திருப்பது ஜப்பானியச் சந்தைக்கு மட்டுமின்றி, நமது இலங்கைச் சந்தையிலும் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்,” எனத் தெரிவித்தார்.
RACCO வாகனமானது, குறிப்பிட்ட வெளிநாட்டுச் சந்தைகளுக்காகத் தயாரிப்புகளை வரையறுக்கவும், தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், உள்ளூர்சார் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை புகுத்தவும் BYD கொண்டுள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஒரே தயாரிப்பை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, “எந்தவொரு நாட்டிற்கும் ஏற்ற வாகனத்தை உருவாக்கும்” ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன் தமக்கு உள்ளது என்பதை இதன் மூலம் BYD நிறுவனம் நிரூபித்துள்ளது. இம்மைல்கல்லானது, BYD நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொடர்ச்சியான முதிர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன், எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச சந்தைகளிலும் உள்ளூர்சார் வாகனங்களை உருவாக்குவதற்கான மதிப்புமிக்க அனுபவத்தையும் வழங்குகிறது.
இன்றுவரை BYD நிறுவனத்தால் பெருமளவில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறிய வாகனமான RACCO, அதன் உலகளாவிய புதிய ஆற்றல் வாகனங்களின் வரிசையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது சிறிய ரக மின்சார வாகனப் பிரிவில் நிறுவனத்தின் தயாரிப்புகளை முழுமைப்படுத்துவதுடன், உலகளாவிய முக்கிய சந்தைகளில் அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கு வலுவான ஆதரவையும் வழங்குகிறது.
RACCO வாகனத்தின் வெற்றிகரமான அறிமுகமானது BYD ஜப்பான் நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு முக்கிய சாதனை மட்டுமின்றி, BYD குழுமத்தின் உலகளாவிய மூலோபாயத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நடைமுறை வெற்றியாகவும் அமைந்துள்ளது. எதிர்காலத்தை நோக்குகையில், BYD நிறுவனம் உலகமயமாக்கலையும், உள்ளூர்மயமாக்கலையும் இணைத்த மூலோபாயத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். தனது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிணையம் மற்றும் முதன்மையான புதிய ஆற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பிராந்திய சந்தைகளின் தேவைகளை மிகச்சிறப்பாகப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை BYD தொடர்ந்து அறிமுகப்படுத்தும். இதன் மூலம் தனது உலகளாவிய வர்த்தக நாம செல்வாக்கையும், சர்வதேச போட்டியாற்றலையும் மேலும் வலுப்படுத்தி, தனது உலகளாவிய வளர்ச்சியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

