சிறப்புச் சலுகைக் கட்டணங்களுடன் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமானச் சேவைகளை ஆரம்பிக்கிறது British Airways
பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான நேரடி வான்வழிப் போக்குவரத்தை மீண்டும் இணைக்கும் வகையில், கொழும்புக்கான தனது முதல் விமானத்தின் வருகையுடன் ஒரு முக்கிய மைல்கல்லை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இன்று எட்டியுள்ளது.
இலங்கை விமானப் பணிக்குழாமினரால் இயக்கப்பட்டு வருகை தந்த இந்த கன்னி விமானத்திற்கு, பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் மேளதாள முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் புதிய விமானச் சேவை இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வணிகப் பயணங்களுக்கும் உறுதுணையாக அமையும்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் இடம்பெறும் இச்சேவையானது பிரிட்டிஷ் எயார்வேஸின் போயிங் 777 (Boeing 777) ரக விமானங்களின் மூலம் இயக்கப்படவுள்ளது. இதில் கிளப் வேர்ல்ட் (பிசினஸ் வகுப்பு), வேர்ல்ட் டிராவலர் பிளஸ் (பிரீமியம் எகானமி வகுப்பு) மற்றும் வேர்ல்ட் டிராவலர் (எகானமி வகுப்பு) ஆகிய மூன்று பயண வகுப்புகள் உள்ளடங்கியுள்ளன.
இந்தச் சேவையின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், கொழும்பில் இருந்து லண்டன் கெட்விக் செல்வதற்கான வேர்ல்ட் டிராவலர் எகானமி வகுப்பில் 10% வரை சேமிப்புடன், 255,000 ரூபா முதல் தொடங்கும் சிறப்பு இருவழிப் பயணக் கட்டணங்களை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்புதிய விமான சேவை தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸின் தலைமைத் திட்டமிடல் மற்றும் மூலோபாய அதிகாரியான நீல் செர்னாஃப் கருத்து தெரிவிக்கையில், “ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு கொழும்பில் தரையிறங்குவது பிரிட்டிஷ் எயார்வேஸுக்கு ஒரு சிறப்பான தருணமாகும். இது இலங்கையை எங்கள் சர்வதேச வலையமைப்பில் மீண்டும் இணைப்பதோடு, வாடிக்கையாளர்கள் தங்களது அடுத்த பயணத்தைத் திட்டமிடும்போது கூடுதல் தெரிவுகளையும் வழங்குகிறது. இலங்கை அதன் அரவணைப்பு, வளமான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்றது. அங்கே மீண்டும் விமானங்களை இயக்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதைக் கொண்டாடும் விதமாகச் சிறப்புச் சலுகைக் கட்டணங்களை வழங்குவதுடன், எங்கள் விமானத்தில் பயணிகளை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
இது குறித்து ஹேலீஸ் அட்வாண்டிஸ் லிமிடெட் (Hayleys Advantis Limited) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருவன் வைத்யாரட் குறிப்பிடுகையில், “கொழும்புக்கான பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான வான்வழித் தொடர்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயணத் தெரிவுகளை வழங்குவதுடன், இரு சந்தைகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களை ஊக்குவிக்கும். பிரிட்டிஷ் எயார்வேஸுடனான எங்களது கூட்டாண்மையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறினார்.
இதனிடையே, விமானத்தின் முதல் சேவையை இயக்கிய சிரேஷ்ட முதல் விமானி பிரதீப் விமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், ‘யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு அங்கே என்னுடைய சிறுவயதைக் கழித்த ஒரு இலங்கையராக, பத்தாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு எமது முதலாவது விமானத்தை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வந்தது எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சிறப்பான ஒரு தருணமாகும். எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு அதை மேலும் மறக்க முடியாததாக மாற்றியது. இலங்கைக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இப்புதிய அத்தியாயத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமிதம் பெருமையடைடைகிறேன்.” எனத் தெரிவித்தார்.
இந்த புதிய விமானச் சேவையானது, ஐக்கிய இராச்சியத்திலிருந்து பயணம் செய்கின்ற பயணிகளுக்கு தெற்காசியாவின் மிக அழகிய மற்றும் கவரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இலங்கைக்கு நேரடிப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. பொன் நிறக் கடற்கரைகள், பண்டைய வரலாற்றுச் சிறப்புமிக்க பண்பாட்டுத் தளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற உணவுக் கலாச்சாரம் எனப் பலதரப்பட்ட அனுபவங்களை ஆராய்ந்தறிய இலங்கை பயணிகளுக்கு வழிவகுக்கிறது.
கடந்த வாரத்தில் ba.com இணையதளத்தில் லண்டனில் இருந்து கொழும்புக்கான விமானப் பயணத் தேடல்கள் 10% இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இது, இலங்கையின் மீது பயணிகளுக்கு இருக்கும் தொடர்ச்சியான ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

