இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்
இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது.
இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து செயல்படும் புதிய கல்வி முறையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த முத்தரப்பு அணுகுமுறை – அரசின் வழிகாட்டுதல், இளைய சமுதாயத்தின் பங்கேற்பு மற்றும் தனியார் துறையின் புத்தாக்கங்கள் – இலங்கையின் டிஜிட்டல் கல்வி எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

அரசாங்கம்: டிஜிட்டல் கற்றலுக்கான கொள்கையும், உட்கட்டமைப்பும்
டிஜிட்டல் கல்வி வளர்ச்சியில் அரசாங்கத்தின் பங்கு மிக முக்கியமானது. இலங்கை அரசானது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடசாலைகளில் நிரலாக்கக் கல்வி, மற்றும் கிராமப்புற டிஜிட்டல் கற்றல் மையங்கள் போன்ற திட்டங்கள் மூலம் எதிர்கால தொழில் தேவைகளுக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துகிறது.
ஆனால், உட்கட்டமைப்பு மட்டும் போதாது என்பதை அரசு உணர்ந்துள்ளது. பயனுள்ள டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்க தனியார் துறையுடன் கூட்டுறவு, உள்ளூர் மொழிகளில் கல்வி கற்றல் மற்றும் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பங்கேற்பை உறுதி செய்யும் கொள்கைகளும் அவசியம். இதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ற கற்றல் வாய்ப்புகள் கிடைக்கும்.
இளைஞர்கள்: பார்வையாளர்களிலிருந்து இணை உருவாக்குநர்களாக
தெற்காசியாவிலேயே மிக அதிகமாக இணையத்துடன் ஒன்றிணைந்த தலைமுறையினராக இலங்கை இளைஞர்கள் திகழ்கின்றனர். இவர்கள் தொழில்நுட்பத்தை வெறும் தகவல் பெறுவதற்கு மட்டுமல்லாமல், புதிய உள்ளடக்கங்களை உருவாக்கவும், கூட்டாக செயல்படவும், தொடர்பு கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய செயல்பாட்டு கலாச்சாரம் அவர்களை கற்றலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் சக்திகளாக மாற்றியுள்ளது.
இளைஞர்கள் TikTok, YouTube அல்லது உள்ளூர் கல்வி சார்ந்த செயலிகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் முதல் ரோபாட்டிக்ஸ் வரை சிக்கலான தலைப்புகளை விளக்கும்போது, அவர்கள் வெறும் காணொளிகளைப் பகிர்வது மட்டுமல்ல, அறிவை சமூக கலாச்சாரமாக மாற்றுகின்றனர். கல்வியை அனைவருக்கும் தொடர்புடையதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குகின்றனர். இந்த ஆற்றலை ஒழுங்கமைக்கப்பட்ட, நம்பத்தகுந்த மற்றும் தேசியக் கற்றல் இலக்குகளோடு இணைந்த வழிகளில் வழிநடத்துவதில்தான் சவாலும் வாய்ப்பும் இருக்கிறது.
சமூக ஊடகங்களும், தொழில்துறையும்: ஈடுபாடுக்கும் கல்விக்கும் இடையிலான பாலம்
சமூக வலைத்தளங்கள் இன்று கல்விக்கான சிறந்த களமாக மாறியுள்ளன. முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே இருந்த இந்த தளங்கள் தற்போது கற்றல் மற்றும் புத்தாக்கத்துக்கான சக்திவாய்ந்த கண்டுபிடிப்பு கருவிகளாக பரிணமித்துள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை, இந்த தளங்களை வெறும் கவனச்சிதறல்களாக அல்லாமல், வளர்ச்சிக்கான வழங்கல் சாதனங்களாக பயன்படுத்துவதே முக்கியமாகும். தொழில் நிறுவனங்கள் கல்வியாளர்களுடனும் அரசுடனும் இணைந்து, உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை, தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். TikTok அறிமுகப்படுத்தியுள்ள குடும்ப இணைப்பு வசதி, நேர மேலாண்மை கருவிகள், மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கண்காணிக்கும் அமைப்பு போன்றவை, பாதுகாப்பும் படைப்பாற்றலும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கின்றன.
இது போன்ற அணுகுமுறைகளை மேலும் பல இலக்கமுறை நிறுவனங்கள் பின்பற்றினால் – அதாவது கற்றல் ஈர்ப்பாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் சூழலை உருவாக்கினால் நம் நாட்டில் நிலையானதும் விரிவாக்கக்கூடியதுமான இலக்கமுறை கல்வி அமைப்பை உருவாக்க முடியும்.
டிஜிட்டல் கல்விக்கான ஒருங்கிணைந்த பார்வை நோக்கி
இலங்கையின் கல்வி எதிர்காலம் ஒரு அமைச்சகத்தாலோ, ஒரு தளத்தாலோ அல்லது ஒரு கொள்கையாலோ வரையறுக்கப்படாது. அது, அரசாங்கத்தின் ஒழுங்குமுறை வழிகாட்டுதல், தனியார் துறையின் புத்தாக்க முயற்சிகள், மற்றும் இளைஞர்களின் படைப்பாற்றல் ஆகியவற்றின் பலங்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.
டிஜிட்டல் கற்றல் இன்று அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளது. இது வெறும் விருப்பத் தேர்வு அல்ல. இந்த அணுகுமுறை நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து செயல்படும்போது, இலங்கை கல்வித் தரத்திலும் டிஜிட்டல் திறன் மேம்பாட்டிலும் முன்னணி நாடாக உருவெடுக்கும். இதன் மூலம் நமது அடுத்த தலைமுறையினர் எதிர்காலத்திற்கு தயாராக மட்டுமல்லாமல், அதை உருவாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக மாறுவார்கள்.
(இலங்கை கணினி சங்கத்தின் துணைத் தலைவரும், தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த தலைவருமான இந்திக டி சொய்சாவால் எழுதப்பட்டது)

