October 14, 2026
#PetTok முதல் #AnimalRescue வரை: விலங்குகளைப் பாதுகாக்க வழிகாட்டும் TikTok
செய்தி

#PetTok முதல் #AnimalRescue வரை: விலங்குகளைப் பாதுகாக்க வழிகாட்டும் TikTok

Oct 14, 2026

மனிதர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதையோ அல்லது கொடூரமான குற்றச்செயல்களுக்கு ஆளாவதையோ மையமாகக் கொண்ட ஆவணப் படங்களை எந்தவித சலனமுமின்றி உணவருந்திக் கொண்டே பார்க்கும் நம்மில் பலர், ஒரு திரைப்படத்தில் நாய் ஒன்று மூன்று வினாடிகள் நொண்டினால் கூட உடனடியாகக் கலங்கிப்போய் விடுகிறோம். திரைப்பட முன்னோட்டங்களில் நாய்கள், பூனைகள் அல்லது பறவைகள் போன்ற செல்லப்பிராணிகள் இடம்பெற்றால், ‘அந்த விலங்கிற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க மாட்டோம்’ என்று சமூக உடகங்களே ஒரு ஆதரவுக் குரலாக மாறிவிடுகிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சியாகத் தோன்றினாலும், காலப்போக்கில் நாம் விலங்குகளை வெறும் பிராணிகளாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டோம் என்பதையே உணர்த்துகிறது. வாசலில் நமக்காகக் காத்திருக்கும் நாய், வீட்டின் செல்லப் பிள்ளையாக மாறும் பூனை, புயல் மழைக்கு ஒதுங்கும் பறவை அல்லது வீதி உலா வரும் ஆதரவற்ற பிராணிகள் என அனைத்தும் நமது வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. அவற்றின் துயரமும் மகிழ்ச்சியும் நமது சொந்த உணர்வுகளாகவே உருவெடுத்துள்ளன.

திரைக்கு அப்பால் இந்த அன்பைக் கொண்டு செல்லும்போது என்ன நடக்கிறது என்பதற்கு வுமைவுழம தளம் ஒரு சிறந்த சான்றாகும். #AnimalsOfTikTok> #PetTok> #DogTok> #CatTok மற்றும் #AnimalLovers போன்ற ஹேஷ்டேக் பக்கங்களின் வழியே விலங்கு பிரியர்கள், மீட்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்ட சமூகத்தினர் ஒன்றிணைகின்றனர். கொஞ்சும் முகங்களைக் காட்டும் வெறும் காணொளிகளுக்கு அப்பால், விலங்குகளை மீட்பது, சிகிச்சையளிப்பது, தத்தெடுப்பது, புனர்வாழ்வு அளிப்பது மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பது போன்ற பல உண்மைக் கதைகளும் விழிப்புணர்வுகளும் இதில் பகிரப்படுகின்றன. உலக விலங்குகள் தினத்தன்று, நாம் நேசிக்கும் விலங்குகளுக்காக உண்மையாக குரல் கொடுப்பது என்றால் என்னவென்பதை ஆராய வேண்டியுள்ளது. திரைப்படத்தில் ஒரு நாய் இறப்பதைப் பார்த்து அழுவது சுலபம். ஆனால், ஒரு விலங்கிற்கு உதவி தேவைப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவதே உண்மையான அன்பாகும்.

ஒரு விலங்கிற்குச் சிறந்த நண்பனாக மாறுவது என்பது பெரும்பாலும் நம் வீட்டிலிருக்கும் செல்லப்பிராணியிலிருந்தே தொடங்குகிறது. ஒரு நாய் கோபமாக இருக்கிறதா அல்லது பதற்றமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவது, ஆபத்தான உணவுகளைத் தவிர்ப்பது, புதிய பிராணிகளை வீட்டிற்குப் பழக்குவது மற்றும் மருத்துவரை எப்போது அணுக வேண்டும் போன்ற நடைமுறைப் பாடங்களை #PetTok மற்றும் #PetCare போன்ற பக்கங்கள் மூலம் நிபுணர்களும் அனுபவமிக்க உரிமையாளர்களும் கற்றுத் தருகின்றனர். ஒரு சிறந்த விலங்கு நேசனாக மாறுவதற்கு எப்போதுமே பெரிய மீட்பு நடவடிக்கைகள் தேவையில்லை; நம்மை நம்பியிருக்கும் பிராணியை முறையாகப் பராமரிக்கக் கற்றுக்கொண்டாலே போதுமானது.

ஒரு விலங்கை அச்சத்திலிருந்தும் காயத்திலிருந்தும் மீட்பது என்பது அந்தப் பயணத்தின் தொடக்கம் மட்டுமே. அதற்குப் பின்னால் அறுவை சிகிச்சை, மருந்துகள், உணவளித்தல், புனர்வாழ்வு மற்றும் மனிதர்களை மீண்டும் நம்ப வைப்பது என நீண்டதொரு போராட்டமே உள்ளது. Animal SOS Sri Lanka> AWPA மற்றும் ஓட்டாரா ஃபெர்னாண்டோவின் Embark போன்ற இலங்கை அமைப்புகள் விலங்கு மீட்பு, கருத்தடை, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தத்தெடுப்பு போன்ற பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. ஒரு விலங்கு தனக்கான நிரந்தர வீட்டை அடையும் தருணம் இணையத்தில் பலராலும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தத்தெடுப்பது மட்டுமன்றி, இடைக்காலப் பராமரிப்பு அளிப்பது, நிதியுதவி செய்வது, தன்னார்வலராகச் செயல்படுவது அல்லது விழிப்புணர்வுப் பதிவுகளைப் பகிர்வது கூட ஒரு விலங்கின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.

அன்பு செலுத்துவதைத் தாண்டி, விலங்குகளும் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியானவை என்பதை உணர்வதே விலங்கு உரிமையின் அடிப்படையாகும். வீதி விலங்குகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை முறைகளை ஆதரித்தல், விலங்கு கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தல் மற்றும் பொறுப்பற்ற விலங்கு வளர்ப்பைக் கேள்விக்குட்படுத்துதல் ஆகியவை குறித்து #AnimalRights மற்றும் #AnimalRights போன்ற பக்கங்கள் வழியே உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. விலங்குகள் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டவை அல்ல என்பதைப் புரிந்துகொள்வதே இதற்கான முதல் படியாகும்.

அதேவேளை, அனைத்து விலங்குகளுக்கும் மீட்பு நடவடிக்கைகள் தேவையில்லை. யானைகள், சிறுத்தைகள், பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் போன்ற வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பே முதன்மையானது. #WildlifeConservation மற்றும் #SriLankaWildlife போன்ற பக்கங்கள் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் தூரத்திலிருந்து ரசிப்பது, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் அவசர காலத்தில் எவ்வாறு செயல்படுவது போன்ற விழிப்புணர்வை வழங்குகின்றன. இணையத்தில் நாம் கற்றுக்கொள்ளும் தகவல்கள், நிஜ வாழ்வில் ஒரு விலங்கு ஆபத்திலிருக்கும்போது துணிச்சலாகச் செயல்பட நமக்கு உதவுகின்றன. நீங்கள் பகிரும் அல்லது பார்க்கும் ஒரு சிறிய பதிவு, ஒரு உயிரின் வாழ்வையே மாற்றக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close