போலிஉள்ளடக்கங்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க TikTok-இன் ‘In-App AI Hub’ அறிமுகம்
செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை பயனர்கள் எளிதில் அடையாளம் காணவும், அவற்றைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் கையாளவும் உதவும் வகையிலான புதிய பாதுகாப்பு முன்னெடுப்புகளை TikTok உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விரிவுபடுத்தப்பட்ட AI விழிப்புணர்வு வளங்கள், AI மூலம் உருவாக்கப்படும் போலி/தேவையற்ற உள்ளடக்கங்களைக் கண்டறியும் மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் ‘உள்ளடக்க உருவாக்கம் மற்றும் நம்பகத்தன்மைக்கான கூட்டணி’ (C2PA) அமைப்புடனான வலுவான கூட்டாண்மை ஆகியவை இதில் அடங்கும்.
டிஜிட்டல் தளங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மிகவும் பொறுப்பான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கு TikTok தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே இந்த புதிய மேம்பாடுகள் அமைந்துள்ளன. அத்துடன், உண்மையான உள்ளடக்கங்களை உருவாக்கும் படைப்பாளர்களைப் பாதுகாப்பதோடு, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களைக் கையாள்வதில் பயனர்களுக்கு தெளிவான புரிதலையும், அதிக அதிகாரத்தையும் வழங்கவும் இப்புதிய முன்னெடுப்புகள் வழிவகுக்கின்றன.
இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, TikTok தளம் தனது AI விழிப்புணர்வு முன்னெடுப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. இதற்காகப் புதிய கல்வி சார்ந்த தகவல்கள் மற்றும் செயலிகளுக்குள்ளேயே கற்கக்கூடிய கற்றல் மையம் (In-App Learning Hub) ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவை மக்கள் பொறுப்புடன் கையாள வழிகாட்டும் நிபுணத்துவ அமைப்புகளில் தொடர்ச்சியான முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், குறிப்பாக பொதுமக்களின் நம்பிக்கை அல்லது நலனைப் பாதிக்கக்கூடிய தலைப்புகளில், AI மூலம் போலி மற்றும் தேவையற்ற உள்ளடக்கங்களை பதிவேற்றும் கணக்குகளைக் கண்டறிவதற்கான மேம்படுத்தப்பட்ட அமைப்புகளையும் TikTok பரிசோதனை செய்யவுள்ளது. அதேவேளையில், C2PA அமைப்பின் வழிநடத்தல் குழுவில் இணைவதோடு, தொழிற்துறை முழுவதும் ‘உள்ளடக்கச் சான்றுகளை’ பரவலாகப் பயன்படுத்துவதை ஆதரிப்பதன் மூலம், AI உள்ளடக்கங்களின் வெளிப்படைத்தன்மையை TikTok மேலும் வலுப்படுத்தி வருகிறது.
TikTok தளம், ‘ஊடகக் கல்விக்கான தேசியக் கூட்டமைப்பு’ (NAMLE) மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணரான ஹென்றி அஜ்டெர் ஆகியோருடன் இணைந்து, மக்கள் AI கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் புதிய வழிகாட்டியை உருவாக்கியுள்ளது. மேலும், TikTok செயலிகளுக்குள் இயங்கும் புதிய AI Hub தற்போது இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு தொடர்பான நடைமுறை ரீதியிலான கல்வியையும், பயனுள்ள தகவல்களையும் இதன்மூலம் பயனர்கள் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
பயனர்கள் TikTok இல் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வார்த்தைகளைத் தேடும்போது, தேடல் முடிவுகளில் இந்த AI Hub தோன்றும். அங்கு அவர்கள் AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை எவ்வாறு கண்டறிவது, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் செயற்கை நுண்ணறிவை மிகவும் பொறுப்புடன் கையாள்வது குறித்த வழிகாட்டிகள், கல்வி வளங்கள் மற்றும் நடைமுறைத் தகவல்களைப் பெறக்கூடிய பிரத்தியேகப் பகுதி வழங்கப்படுகிறது.
மேலும், TikTok தளம் தனது பயனர்களிடையே AI குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிபுணத்துவ அமைப்புகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும். 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ‘NoFiltr’ மற்றும் ‘Raspberry Pi Foundation’ உள்ளிட்ட பங்கேற்கும் அமைப்புகள் மூலம் வெளியிடப்பட்ட விழிப்புணர்வுக் காணொளிகள் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளன. மக்கள் செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் பொறுப்புடன் பயன்படுத்தவும் இக்காணொளிகள் பெரிதும் உதவுகின்றன.
இத்திட்டத்திற்காக TikTok இதுவரை 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதுடன், இதன் மூலமாக மேலும் பலரைச் சென்றடையவும், சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தவும் தனது முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
TikTok தளம் தனது தளத்தில் போலி மற்றும் தேவையற்ற உள்ளடக்கங்களைப் பரப்புவதை நீண்டகாலமாகத் தடை செய்துள்ளதுடன், போலி கணக்குகளை பெருமளவில் கண்டறிந்து அகற்றுவதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 86 மில்லியனுக்கும் அதிகமான போலி கணக்குகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், ‘உள்ளடக்கச் சான்றுகள்’, படைப்பாளர்களுக்கான அடையாளக் குறியீட்டு கருவிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத Watermarking தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, 3 பில்லியனுக்கும் அதிகமான காணொளிகளை ‘செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள்’ என TikTok அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவின் நேர்மறையான பயன்பாடுகளை ஊக்குவிப்பதோடு, பாதுகாப்பு அம்சங்களை வழங்கவும் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை அளிக்கவும் TikTok மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான முயற்சிகளின் ஒரு அங்கமாக அமைகின்றன.
Smart Split மற்றும் AI Outline போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்பாக்கக் கருவிகளைத TikTok தளம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதேவேளை, பயனாளர்கள் தாங்கள் காணும் AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களின் அளவைத் தாங்களே தீர்மானிக்கும் வசதியை வழங்கும் Manage Topics போன்ற புதிய அம்சங்களையும் பரிசோதனை செய்து வருகிறது.
TikTok-இன் AI வெளிப்படைத்தன்மை முயற்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு TikTok-இன் உத்தியோகபூர்வ செய்தி அறையைப் பார்வையிடலாம்.

