எல்பிஎல் 2026: இந்தியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றியது FanCode
இலங்கையின் முதன்மை டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்பிஎல்) ஆறாவது அத்தியாயத்தை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ‘ஃபான்கோட்’ (FanCode) நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள இத்தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் FanCode செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் காணலாம் என எல்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஐபிஜி நிறுவனத்தின் வணிக மேலாண்மையின் கீழ் நடத்தப்படும் லங்கா பிறீமியர் லீக் தொடர், தெற்காசியாவின் மிக முக்கியமான டி20 லீக் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டை விட இம்முறை பார்வையாளர்களின் எண்ணிக்கை 65% அதிகரித்துள்ள நிலையில், ஃபான்கோட் நிறுவனத்துடனான இந்த புதிய கூட்டணி, இந்திய ரசிகர்களுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, தொடரின் டிஜிட்டல் எல்லையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய கூட்டணி தொடர்பில் ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் கருத்து தெரிவிக்கையில், “உலகிலேயே மிகத் தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில், எமது டிஜிட்டல் சந்தையை விரிவுபடுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். FanCode நிறுவனத்துடன் இணைவதன் மூலம், ரசிகர்களுக்கு உயர்தரமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் சுவாரசியமான நேரடி ஒளிபரப்பு அனுபவத்தை எங்களால் வழங்க முடியும். லங்கா பிறீமியர் லீக்கின் இந்த 6-வது அத்தியாயத்தில் களமிறங்கவுள்ள சர்வதேச நட்சத்திரங்களின் அதிரடி ஆட்டங்களை ரசிகர்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்க FanCode இன் டிஜிட்டல் தளம் மிகச்சரியான தேர்வாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், FanCode நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரசன்னா கிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், “லங்கா பிறீமியர் லீக் தொடருடன் மீண்டும் கைகோர்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உலகளாவிய கிரிக்கெட் அட்டவணையில் ஒரு சவாலான தொடராக உருவெடுத்துள்ள லங்கா பிறீமியர் லீக், FanCode இன் கிரிக்கெட் உள்ளடக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கை மற்றும் சர்வதேச முன்னணி வீரர்களின் பங்களிப்போடு நடைபெறவுள்ள 2026 லங்கா பிறீமியர் லீக் தொடர், இந்திய ரசிகர்களுக்கு அரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த அதிரடி ஆட்டங்கள் அனைத்தையும் FanCode இல் நேரலையாக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக்கில் கொழும்பு கேப்ஸ், தம்புள்ளை சிக்சர்ஸ், கோல் கெலண்ட்ஸ், கெண்டி றோயல்ஸ் மற்றும் நடப்பு சம்பியனான ஜஃப்னா கிங்ஸ் ஆகிய 5 அணிகள் களம் காண்கின்றன. இத்தொடரில் 62 முன்னணி இலங்கை வீரர்களுடன், 32 சர்வதேச நட்சத்திர வீரர்களும் விளையாடவுள்ளனர்.
இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக, இந்தியாவின் அனுபவமிக்க சகலதுறை வீரர் விஜய் சங்கர் இம்முறை லங்கா பிறீமியர் லீக்கில் கெண்டி றோயல்ஸ் அணிக்காக விளையாடி தனது எல்பிஎல் அறிமுகத்தை வழங்கவுள்ளார். இவர்களுடன் இங்கிலாந்தின் மொயின் அலி, நியூசிலாந்தின் ஜிம்மி நீஷம், பங்களாதேஷின் சகிப் அல் ஹசன், தஸ்கின் அஹமட், இலங்கையின் முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் இத்தொடரில் பங்கேற்கின்றனர்.
இந்த ஐந்து அணிகளும் Double Round-Robin முறையில் மோதவுள்ளன, அதைத் தொடர்ந்து விறுவிறுப்பான பிளே-ஆஃப் சுற்றுகள் நடைபெறும். 21 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த ஆண்டுக்கான எல்பிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளதோடு, FanCode மூலம் இந்தியாவில் பரவலான டிஜிட்டல் அணுகலும் கிடைத்துள்ளதால், இத்தொடரின் உலகளாவிய வணிக விரிவாக்கத்தில் இந்த அத்தியாயம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.

