
IIHS நிறுவனம் Surrey பல்கலைக்கழகத்துடன் இணைந்து தாதியர் இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு பாடநெறியை அறிமுகப்படுத்துகிறது
தாதியர் கல்வி இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு (BSc. Hons) பாடநெறி (Top-Up) திட்டத்தை தொடங்குவதற்கு Surrey பல்கலைக்கழகமும் International Institute of Health Sciences நிறுவனமும் (IIHS) பல்துறை கூட்டிணைவொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இத் திட்டத்தின் மூலம் IIHS வழங்கும் உயர் தாதியர் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு Surrey பல்கலைக்கழகம் வழங்கும் பூரண கௌரவ பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், Surrey பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவ விஞ்ஞான பீடமும் IIHS-ம் இணைந்து தாதியர் மற்றும் சுகாதாரக் கல்வித் துறையை மேம்படுத்தவும், தொழில்முறை அபிவிருத்தியை ஏற்படுத்தவும், உலகளாவிய சுகாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கூட்டுக் கல்வித் திட்டங்கள், சர்வதேச சமூகத்தை இலக்காகக் கொண்ட தொடர் தொழில்முறை அபிவிருத்தி பாடநெறிகள், பீடங்கள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
Surrey பல்கலைக்கழகத்தின் உள்வியல் மருத்துவக் கல்லூரி, உளவியல் தொடர்பான இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு (BSc Psychology) மற்றும் முதுகலை விஞ்ஞானமாணி (MSc Psychology) பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. அவை MSc பட்டப்படிப்புகளாக வழங்கப்படவுள்ளன.
IIHS வழங்கும் உயர் தாதியர் டிப்ளோமா, மருத்துவ பயிற்சி, நோயாளர் பராமரிப்பு முகாமைத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான திடமான பயிற்சிக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது. இதன் பாடத்திட்டத்தில் உடற்கூறியல், உடலியல், மருந்தியல், மருத்துவ அறுவை சிகிச்சை, தாதியர் சேவை , உளநலம், சமுதாயச் சுகாதாரம் மற்றும் தாதியர் பயிற்சி தலைமைத்துவம் போன்ற பல்வேறு பாடங்கள் அடங்கும். விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் மருத்துவ ரீதியான முடிவெடுக்கும் திறன் மேம்பாடு, தகவல் தொடர்பாடல் திறன் மற்றும் குழுப்பணி உணர்வை மே்படுத்தல், உலகளாவிய சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய நெறிமுறை, சட்டம் மற்றும் ஆராய்ச்சிக் கோட்பாடுகள் பற்றிய பரந்தளவிலான புரிதலைப் பெறுதல் போன்ற ஏராளமான அனுகூலங்களை இதன் மூலம் மாணவர்கள் பெறுவார்கள்.
தாதியர் கல்வி இளங்கலை விஞ்ஞான கௌரவப் பட்டப்படிப்புத் திட்டம் மாணவர்களுக்கு தொழில்முறை மதிப்புகள், தொடர்பாடல் திறன்கள் மற்றும் தனிநபர் திறன்கள் ஆகியவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு உதவும். . இந்தத் திட்டம் தலைமைத்துவம், நிறுவனக் கோட்பாடு, பொதுச் சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி முறைகள் போன்ற பல்வேறு மேம்பட்ட பாடங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு Nursing and Midwifery Council (NMC) தரநிலைகள் பற்றிய புரிதலும் கிடைக்கும்.
இந்தப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் மாணவர்கள் NMC நடாத்தும் திறன் மட்ட பரீட்சையில் தோற்றுவதற்கு தகுதி பெறுவார்கள். இதன் மூலம் குறித்த ஒழுங்குபடுத்தல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தாதியர் வல்லுனர்களாகவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
“Surrey பல்கலைக்கழகத்துடன் இணைவதன் மூலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தாதியர் கல்வியில் இளங்கலை விஞ்ஞானப் பட்டத்திற்கான நேரடிப் பாதையொன்றை திறந்துள்ளோம். இந்தப் படிப்பை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிபுணராகவும், மேலும் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் முடியும். எமது நிறுவனம் இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட தாதியர் உத்தியோகத்தர்களை வெற்றிகரமாக சுகாதாரத் துறைக்கு வழங்கியுள்ளது. அத்தகைய சூழலில், QS தரவரிசையில் 285 வது எனும் உயர் மட்டத்திலுள்ள Surrey பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கக் கிடைத்தமை நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும்.” என IIHS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் முதலாவது பட்டப்படிப்பு பீடாதிபதியுமான சிறப்பு மருத்துவர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்க தெரிவித்தார்.
Surrey பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவ விஞ்ஞானப் பீடத்தின் (FHMS) இடைக்கால துணைவேந்தரும் நிறைவேற்று பீடாதிபதியும் கால்நடை நுண்ணுயிரியல் மற்றும் நோயியல் பேராசிரியருமான ரொபர்ட்டோ லா ராஜியோன் கருத்து தெிரிவிக்கையில் “IIHS உடன் இணைந்து இந்த இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு பாடநெறியை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். தொழில்முறை தாதியர் கல்வியில் நாம் கொண்டுள்ள நிபுணத்துவத்தை ஒரு சர்வதேச பங்குதாரருடன் பகிர்ந்து கொள்வது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த திட்டத்தின் மூலம், பட்டதாரிகள் தங்கள் தொழில்முறை வாழ்க்கைக்குத் தேவையான அறிவு, திறன்கள் ஆற்றல்கள் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்.” என்றார்.
“இலங்கை தற்போது ஒரு பிராந்திய கல்வி மையமாக மாறி வருகிறது. இந்தக் கூட்டிணைவின் மூலம் ஆசியப் பகுதி முழுவதுமுள்ள மாணவர்களுக்கு IIHS வழங்கும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்த உயர்கல்வித் திட்டங்களைப் கற்கும் வாய்ப்பை பெற முடியும். கல்வித் தேர்ச்சியையும் பிரவேசத்தையும் இணைப்பதன் மூலம் தொழில் இலக்குகளை அடைவதற்கான தெளிவான பாதையை உருவாக்குவதே எமது நோக்கம்.” என FHMS இன் சர்வதேச விவகாரங்களுக்கான உதவி பீடாதிபதியும் உயிரியல் உதவி பேராசிரியருமான கலாநிதி ஷெலினி சுரேந்திரன் தெரிவித்தார்.