முதல் அரையாண்டில் வலுவான செயல்திறனை வழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
பன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), இந்த ஆண்டின் வலுவான ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் (1HFY26) அனைத்து துறைகளிலும் ஒரு ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்கியுள்ளது. சன்ஷைன் குழுமமானது, 1HFY26 இல் 32.3 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட (YoY) 7.4% அதிகரிப்பாகும். இதற்கு முதன்மைக் காரணம், நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளின் வலுவான ஒத்துழைப்புடன், சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகும்.
இக்குழுமத்தின் சுகாதாரத் துறை சன்ஷைன் நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு அதிகப் பங்களிப்பை அளித்துள்ளது, இது மொத்த வருவாயில் 53.7% ஆகும். நுகர்வோர் துறை 30.2% மற்றும் விவசாய வணிகத் துறை 16.1% பங்களிப்பை அளித்துள்ளது. இந்த ஆய்வுக்குட்பட்ட காலகட்டத்தில் மொத்த இலாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 12.9% அதிகரித்து 10.3 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மொத்த இலாப விகிதம் 153 அடிப்படைப் புள்ளிகள் (bps) அதிகரித்து 31.9% ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், விவசாய வணிகப் பிரிவில் ஏற்பட்ட இலாப விகித விரிவாக்கமே ஆகும்.
இக்குழுமத்தின் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாய் (EBIT) 18.6% அதிகரித்து 5.5 பில்லியன் ரூபாவாக அதிகாித்துள்ளது. சுகாதாரத் துறையின் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாய் (EBIT) 16.7% குறைந்த போதிலும், விவசாய வணிகம் மற்றும் நுகர்வோர் துறைகளில் மேம்பட்ட இயக்கச் செயல்திறனை இது பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 15.4% ஆக இருந்த EBIT விகிதம் 1HFY26 இல் 17.0% ஆக அதிகரித்துள்ளது. விவசாய வணிகம் மற்றும் நுகர்வோர் துறைகளின் வலுவான செயல்திறன் இதற்கு ஆதரவளித்ததுடன், இது சுகாதாரத் துறையின் சுருக்கத்தை ஈடுசெய்ய உதவியது.
இந்த செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “எங்களின் பன்முகப்படுத்தப்பட்ட வணிக மாதிரி தொடர்ந்து ஒரு முக்கிய பலமாக உள்ளது, இது மாறிவரும் சந்தை நிலைமைகளை நம்பிக்கையுடன் சமாளிக்க எங்களுக்கு உதவுகிறது. 1HFY26 இல் அடைந்த வளர்ச்சி, ஒழுக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் எங்களின் திறனை வலுப்படுத்துகிறது. அடுத்த கட்டத்திற்குள் நுழையும் போது, அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக, சுகாதாரத் துறையில் உள்ளூர் உற்பத்தியை விரிவாக்குவது, நுகர்வோர் வரம்பை விரிவுபடுத்துவது மற்றும் விவசாய வணிகம் முழுவதும் உற்பத்தியை அதிகரிப்பது என்பதில் எங்களின் கவனம் தொடர்ந்து இருக்கும்.” என தெரிவித்தார்.
சுகாதாரத் பிரிவு
இந்த ஆய்வுக் காலப்பகுதியில், குழுமத்தின் சுகாதாரத் துறை 17.3 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்தது, இது முகவர், விநியோகம் மற்றும் சில்லறை மருந்து விற்பனை பிரிவுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் ஆதரிக்கப்பட்டு, கடந்த ஆண்டை விட (YoY) 7.4% அதிகரித்துள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளால் முகவர் வணிகத்தின் வளர்ச்சி ஆதரிக்கப்பட்டது. இது முக்கிய முகவர் கூட்டுறவுகள் மற்றும் முக்கிய தயாரிப்புப் பிரிவுகளில் தொடர்ச்சியான கரிம விரிவாக்கத்தை (organic expansion) பிரதிபலிக்கிறது. சில்லறைப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 15.1% அதிகரித்துள்ளது. இது மருந்துகள் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரு பிரிவுகளிலும் அதிக பரிந்துரை அளவுகள் மற்றும் மதிப்பு வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட செயற்பாட்டு மாதிரி மற்றும் புதிய மூலோபாய கூட்டாண்மைகளின் ஒத்துழைப்புடன், Healthguard விநியோகம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 29.5% வருவாய் உயர்வைப் பதிவு செய்தது. குழுமத்தின் மருந்து உற்பத்தி வணிகமான Lina Manufacturing, 1HFY26 இல் 17.4% ஆண்டுக்கு ஆண்டு வருவாய் சுருக்கத்தைக் சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம், 2025 நிதியாண்டிற்கான அரசாங்க கொள்முதல் கட்டளைகள் (orders) குறைக்கப்பட்டதே ஆகும். இந்த குறுகிய கால தாக்கத்தை மீறியும், வணிகமானது நீண்ட கால நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் வகையில், கொள்ளளவு பயன்பாடு, தயாரிப்பு பல்வகைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
நுகர்வோர் பிரிவு
ஏற்றுமதி மற்றும் வர்த்தகநாம வணிகங்கள் இரண்டையும் உள்ளடக்கிய நுகர்வோர் துறையானது, 1HFY26 இல் 9.8 பில்லியன் ரூபாவாக முடிவடைந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 1.0% வருவாய் அதிகரிப்பைப் பதிவு செய்தது. பிராண்டட் தேயிலை மற்றும் மிட்டாய் வணிகங்களின் வருவாய் 1HFY26 இல் 5.1% YoY வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த வளர்ச்சி இரண்டு பிரிவுகளிலும் வலுவான செயல்திறனால் ஆதரிக்கப்பட்டது. பிராண்டட் தேயிலை பிரிவில், 1HFY26 இல் அளவுகள் மற்றும் மதிப்புகள் இரண்டிலும் நிலையான வளர்ச்சிப் பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், மிட்டாய் பிரிவில், அளவு வளர்ச்சியின் அடிப்படையில் வருவாய் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, ஏற்றுமதி வணிகம் ஏற்றுமதி அளவுகளில் அதிகரிப்பைக் கண்டபோதிலும், ஆண்டுக்கு ஆண்டு (YoY) 1.2% என்ற மிகக் குறைந்த சுருக்கத்தைப் பதிவு செய்தது. இதற்கு காரணம், அமெரிக்காவின் சுங்கவரி (U.S. tariff) மாற்றங்களின் பாதகமான தாக்கத்தைத் தொடர்ந்து, அதிக மதிப்புள்ள தேயிலைப் பொருட்களின் பிரிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகும். மேம்பட்ட செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் இறுக்கமான செலவு நிர்வகிப்பு ஆகியவற்றின் விளைவாக, நுகர்வோர் துறையின் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாய் விகிதம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.1% ஆக இருந்ததில் இருந்து 1HFY26 இல் 7.8% ஆக உயர்ந்தது.
விவசாய வணிகத் துறை
Watawala Plantations PLC (CSE: WATA) மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குழுமத்தின் விவசாய வணிகத் துறை, 5.2 பில்லியன் ரூபா என்ற ஈர்க்கக்கூடிய வருவாயைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட (YoY) 21.9% அதிகமாகும். சாதகமான சந்தை நிலைமைகளால் பயனடைந்து, ஃபாம் ஒயில் பிரிவில் ஏற்பட்ட வலுவான செயல்திறனால் இந்த வருவாய் வளர்ச்சி உந்தப்பட்டது, இது ஆண்டுக்கு ஆண்டு 26.7% வளர்ச்சியடைந்தது. பால் வணிகம் 1HFY26 இல் 578.0 மில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்தது, இது இக்காலகட்டத்தில் பால் விலை குறைந்ததால் ஆண்டுக்கு ஆண்டு 6.4% குறைந்தது. பால் வணிகத்தில் சுருக்கம் இருந்தபோதிலும், இந்தத் துறைக்கான முற்றுமுழுதான இலாபம் கடுமையாக மேம்பட்டது. வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாய் விகிதம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 36.1% ஆக இருந்ததில் இருந்து 1HFY26 இல் 49.1% ஐ எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

