August 16, 2025
இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்
செய்தி

இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்

Aug 15, 2025

இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLINTEC) உயர்தர பகுப்பாய்வு சேவைகள் ஆய்வகம் இலங்கை அங்கீகார சபையிடமிருந்து (SLAB) ISO/IEC 17025:2017 அங்கீகாரத்தை அண்மையில் பெற்றுக் கொண்டது. இந்த சர்வதேச அங்கீகாரம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளை செய்வதற்கான ஆய்வகத்தின் தொழில்நுட்பத் திறமையை உறுதிப்படுத்துகிறது.

SLINTEC நிறுவனம் தற்போது அஃப்லாடாக்சின் (aflatoxin) பரிசோதனை, தாலேட் (phthalate) கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த முக்கிய பரிசோதனைகள் விவசாய உணவு உற்பத்தியாளர்கள் உள்நாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு போன்ற ஏற்றுமதி சந்தைகளிலும் கடுமையான உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றன.

இது தொடர்பில் SLINTEC-ன் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் சமன் செனவீர கூறுகையில், ‘இந்த அங்கீகாரம் எங்களுக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது நாங்கள் உணவுத் துறை நிறுவனங்களுக்கு கால தாமதமின்றியும், அதிக செலவில்லாமலும் சர்வதேச தரத்திற்கு ஏற்ற பரிசோதனைகளை செய்து தர முடியும், இந்த சாதனையை அடைய உதவிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இயங்கும் BESPA-FOOD (Best Standardized Practices for Agri-Food) திட்டத்திற்கும், அதனை நடைமுறைப்படுத்திய ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பிற்கும் (UNIDO) எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

2024 இல் இலங்கையின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி 12.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதில் தேயிலை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், மசாலாப் பொருட்கள், சாறுகள், அத்தியாவசிய எண்ணெய்கள் 462 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உணவு மற்றும் பானங்கள் ஏற்றுமதி 478 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஈட்டித் தந்தன. இந்தப் பொருட்கள் பலவற்றில் அஃப்லாடாக்சின்கள் (aflatoxins) போன்ற நச்சுப் பொருட்களும், உணவு தொடர்பு பொருட்களில் தாலேட்களும் (phthalates) இருக்கலாம். இந்த அஃப்லாடாக்சின்கள் மசாலாப் பொருட்கள், தானியங்கள் மற்றும் கொட்டைகளில் இயற்கையாகவே காணப்படும் நச்சுப் பொருட்களாகும். அதேபோல, உணவுப் பொருட்களுடன் நேரடித் தொடர்புகொள்ளும் பொருட்களில் காணப்படும் தாலேட்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இத்தகைய தரநிலைகளுக்கு இணங்காத நிலையில், அதிக செலவு கொண்ட ஏற்றுமதி நிராகரிப்புகள் அல்லது முக்கிய சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

SLINTEC நிறுவனம், இந்த சாதனையை இலங்கையின் உணவுத் தொழிற்துறைக்கான வலுவான புத்தாக்க சூழலை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதுகிறது. விரைவான சேவை, போட்டி விலைகள் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை வழங்குவதன் மூலம், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தயாரிப்பு மேம்பாடு முதல் ஒழுங்குமுறை அனுமதி வரை அனைத்து நிலைகளிலும் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.

‘இந்த அங்கீகாரம் இரண்டு முக்கிய நன்மைகளைத் தருகிறது. முதலாவது, நமது உற்பத்தியாளர்களின் போட்டித்திறனை மேம்படுத்தும் நடைமுறைக் கருவி; இரண்டாவது, நமது நாட்டின் ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்கான உத்திசார்ந்த முன்னேற்றம்,’ என்று பேராசிரியர் சமன் செனவீர மேலும் கூறினார்.

உலகளவில் பாதுகாப்பான, உயர்தரமான உணவுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், SLINTEC நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவைகள் இலங்கை உணவு உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்து உலக சந்தையில் தன்னம்பிக்கையுடன் போட்டியிட உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close