ஆடைத்துறை சார்ந்த பெண்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த MAS உடன் இணையும் UNFPA
நவம்பர் 28 ஆம் திகதி, உலகளாவிய ஆடை-தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான MAS மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவை புரிநதுணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வருட ஒத்துழைப்பின் தொடக்கத்தையே குறிக்கிறது இந்த கூட்டாண்மை.
இந்த ஒப்பந்தம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீட்டை அதிகரிப்பதற்கான MAS மற்றும் UNFPA இடையேயான பகிரப்பட்ட தூரநோக்குப் பார்வையை ஒருங்கிணைக்கிறது. இது ஆடையியல் துறையில் உள்ள பெண்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் அதிகாரமளித்து ஊக்குவித்து, தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும், நிறுவனங்கள் பாதுகாப்பான பொது தளங்களை உருவாக்கவும் வலியுறுத்துகிறது. இந்த கூட்டாண்மையின் மூலம், இரு அமைப்புகளும் இணைந்து மருத்துவ மையங்களை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் ஆடைத் துறையின் ஊழியர்களுக்கு இலகுவாக அணுகக்கூடிய விதத்தில் நல்வாழ்வு வசதிகளை BOI பிரிவிற்குள் உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளன. “பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் ஒத்துழைப்பது என்பது சரியான விடயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் சமூகங்களுக்கும் வணிகங்களுக்கும் புத்திசாதுரியமான செயற்பாடாகும். இந்த கூட்டாண்மை ஆனது நாம் ஒன்றாக இணைந்து ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தெளிவான கட்டமைப்பை எங்களுக்கு வழங்குகிறது. ஆடைத் துறையின் முதுகெலும்பாக இருக்கும் பெண்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நாம் இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என MAS Holdingsஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதை அடைய, MAS மற்றும் UNFPA ஆகியவை இணைந்து இனப்பெருக்க ஆரோக்கியம் (SRH), பாலின அடிப்படையிலான வன்முறை (GBV), மற்றும் மனநலம் மற்றும் உளவியல் சமூக ஆதரவு சேவைகள் (MHPSS) உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த நல்வாழ்வு மையங்களுக்கான விரிவாக்கக்கூடிய மாதிரியை இணைந்து வடிவமைத்து ஆராயும்.
MAS, சுகாதாரம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அடையப்பட்ட சாத்தியமான நிதி இலாபத்தை மதிப்பிடுவதற்கு UNFPA இன் Return on Investment Tool (ROI-T for Her) ஐப் பயன்படுத்தும். இதன் மூலம், இந்த முயற்சிகளின் மதிப்பை வலுப்படுத்தவும், நிறுவனங்களைத் தூண்டி, தொழில்துறையில் பெண்கள் மற்றும் இளம் யுவதிகளுக்கான ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கவும் MAS எதிர்பார்த்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடுவது பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டுடன் எதிர்பாராத விதமாக ஒத்துப்போகிறது, இது பெண்கள் மற்றும் இளம் யுவதிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் வருடாந்திர உலகளாவிய பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி தொடங்கி மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில், MAS பல அரச மற்றும் தனியார் துறை தரப்பினருடன் இணைந்து, பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்க, முக்கிய கட்டிடங்களை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச் செய்யும் – உயிர் பிழைத்தவர்களுடனான ஒற்றுமையின் அடையாளம் – அத்துடன் அதன் நிறுவன பிரிவுகளுடன் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுப் பணிகளையும் மேம்படுத்தும். நவம்பர் 25 ஆம் திகதி, UNFPA, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, ஐநா அமைப்புகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தையும் இணைத்து, ‘Orange the World’ உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் இளம் யுவதிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கொழும்பு மாநகராட்சியை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச் செய்தது.
“நிறுவனங்கள் இதுபோன்ற பணிச்சூழல் முயற்சிகளுடன் முன்னேறும் போது, அவை விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முதலீட்டை ஊக்குவித்து, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சேவைகளை பெரிய அளவில் அணுகுவதாக மாற்றுகின்றன. இது தொழில்துறைகளில் உள்ள பெண்களுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது.”
“நிறுவன மற்றும் உலகளாவிய முயற்சிகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை அனைவருக்கும் உருவாக்கி, இறுதியில் சுகாதார சமத்துவத்தையும் பாலின சமத்துவத்தையும் மேம்படுத்தும் போது என்ன சாத்தியமாகும் என்பதற்கு இந்த கூட்டாண்மை ஒரு சக்திவாய்ந்த உதாரணமாகும். பாதுகாப்பான பொது இடங்களை உருவாக்கி கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதன் மூலம், ஆடைத் துறையில் உள்ள பெண்கள் மற்றும் இளம் யுவதிகளை அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய அதிகாரமளித்து ஊக்குவிக்கிறோம்,” என UNFPA பிரதிநிதி Kunle Adeniyi கூறினார்.
இந்த கூட்டாண்மை, வணிகத்திற்குள் மற்றும் அதன் பங்குதாரர் நெட்வொர்க்கில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான MAS இன் மாற்றத்திற்கான திட்டத்துடனும் ஒத்துப்போகிறது. ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் (UNGC) கொள்கைகளால் வழிநடத்தப்படும் MAS இன் கவனம் நல்ல நோக்கத்திற்காக வாழ்க்கையை மாற்றுவதாகும் – அதன் மூலோபாயத்தின் முக்கிய தூண் பெண்களுக்கு அதிகாரமளிப்பதாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள முயற்சிகள், Women Go Beyond திட்டம் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளுடன் இணைந்து, பாலின சமத்துவம் மற்றும் அர்த்தமுள்ள தாக்கத்தை அடைவதற்கான MAS இன் தூரநோக்குப் பார்வையை மேலும் முன்னேற்றும்.
பாலின அடிப்படையிலான வன்முறையின் நெருக்கடி மிகமுக்கியமாக கருத்திலெடுக்கப்பட வேண்டியது. பெண்கள் மற்றும் இளம் யுவதிகளுக்கு எதிரான வன்முறைக்கு #எந்தவிதமான மன்னிப்பிற்கும் இடமில்லை. ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம், இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே காணக்கூடிய எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியும்.