இலங்கையின் சுவை மரபை உலக அரங்கில் நிலைநிறுத்தும் “லுங்கி” உணவகத்திற்கு மிச்செலின் பிப் கோர்மண்ட் விருது
மன்ஹாட்டனின் அப்பர் ஈஸ்ட் சைட் பகுதியில் இயங்கும் தென்னிந்திய–இலங்கை உணவகமான “லுங்கி”, 2024 ஆம் ஆண்டின் வெற்றியைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிற்கும் மிச்செலின் பிப் கோர்மண்ட் கௌரவத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மிச்செலின் அங்கீகாரம் பெறும் முதல் இலங்கை உணவகமாக லுங்கி வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
மர்வின் வின்ஸ்டன் மற்றும் ஆல்பின் வின்சென்ட் இணைந்து நிறுவிய லுங்கி, உண்மையான தெற்காசிய சுவைகளைக் உலகத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய முகவராக வேகமாக வளர்ந்து வருகிறது. தனித்துவமான மசாலா சுவைகள், பூர்வீக மரபு, இதயப்பூர்வமான விருந்தோம்பல் ஆகியவற்றின் சங்கமம் இந்த உணவகத்தின் அடையாளமாக விளங்குகிறது.
கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட சமையற்கலை நிபுணர் ஆல்பின், தனது பாட்டியின் சமையலறை நினைவுகளையும் பிராந்திய உணவு மரபுகளையும் இணைத்து, லுங்கியின் தனிச்சிறப்பை உருவாக்கியுள்ளார்.
சமையல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வசந்த குமார், கேரளாவைச் சேர்ந்த சூஸ் ஷெஃப் ஆண்ட்ரூ சிமேதி, தாஜ் கோரமண்டலில் தோசை நிபுணத்துவத்திற்காக அறியப்படும் திருநாவுக்கரசு, இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையற்கலை நிபுணர் ருஷ்துன் ராம்ஸி ஆகியோர் தங்களது திறன்களைப் பகிர்ந்து, லுங்கியின் தரத்தையும் மதிப்பையும் உயர்த்தி வருகின்றனர்.
கடலில் உயிரிழந்த ஆல்பினின் பாட்டனாருக்கு அஞ்சலியாக, தீவு தேசத்தின் கடல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் “பேர்ல் டைவர்” எனும் Cocktail இங்குக் குறிப்பிடத்தக்க சிறப்பாக வழங்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் திறக்கப்பட்டதிலிருந்து, லுங்கி உள்ளூர்வாசிகள் மற்றும் சர்வதேச உணவு அன்பர்களிடையே பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. சுவை, தரம், மற்றும் உயர்ந்த மதிப்பீட்டு நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மிச்செலின் ஆய்வாளர்கள் வழங்கிய இந்த விருது, லுங்கியின் எழுச்சியை உறுதிப்படுத்துகிறது.
வாழைஇலை சிறப்பு உணவு, காலிஃபிளவர் 65, மட்டன் ரோல்ஸ் போன்ற பிரபலமான உணவுகள், யாழ்ப்பாணம் முதல் கன்னியாகுமரி, தென் கிழக்கு கடலோரச் சுவைகள்வரை தெற்காசிய உணவு மரபைக் களமிறக்குகின்றன.
மிச்செலின் அங்கீகாரத்துடன் மட்டுமல்லாது, முன்னணி ஊடகங்கள் மற்றும் சர்வதேச உணவு விமர்சகர்களிடமிருந்தும் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் லுங்கி, உலகளாவிய சமையல் அரங்கில் இலங்கையின் பெருமையை மேலும் உயர்த்துகிறது.

