August 15, 2025
சமூக ஊடகங்களின் யுகத்தில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்   
செய்தி

சமூக ஊடகங்களின் யுகத்தில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்   

Jun 4, 2025

டிஜிட்டல் காலத்தில் பெற்றோராக இருப்பது இரண்டு வேறுபட்ட உலகங்களுக்கு இடையேயான பயணமாகும். பழைய காலத்து பெற்றோர் போல கட்டுப்படுத்த முடியாத ஒரு புதிய உலகில் இன்றைய தலைமுறையினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் வளர்ந்த காலத்தில் நேரடி உரையாடல்கள், குடும்ப நெருக்கம், சமூக வரையறைகள் என்பன முக்கியமானவை. ஆனால் இன்று எனது பிள்ளை வாழும் உலகம் முற்றிலும் வேறுபட்டது. எல்லையற்ற டிஜிட்டல் வெளியில் அவர்கள் சுவாசிக்கிறார்கள்.

இன்றைய சமூக வலைத்தளங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அவை நம் பிள்ளைகளின் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. அவர்களுக்கு அது கற்றல் தளம், நண்பர்களை சந்திக்கும் இடம், தங்களை வெளிப்படுத்தும் களம். கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளின் அடித்தளமாக மாறிவிட்டது.

இதனால், இன்றைய குழந்தை வளர்ப்பு ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மிகவும் சிக்கலான சவாலாக மாறியுள்ளது, இதில் பழைய மதிப்புகளுக்கும் புதிய டிஜிட்டல் யதார்த்தத்திற்கும் இடையே சமநிலையை கண்டறிவது பெற்றோரின் முக்கிய பணியாக உள்ளது.


சமூக ஊடகங்களின் இரட்டை முகம்

சமூக ஊடகங்கள் இன்றைய உலகில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்துள்ளது. இது எல்லைகளை அழித்து, புதிய தொடர்புகளை உருவாக்கி, அனைவருக்கும் தகவல்களை கிடைக்கச் செய்கிறது. ஆனால், இந்த சக்திவாய்ந்த கருவி நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக பதின்ம வயதினருக்கு, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

நாம் அனைவரும் கேள்விப்பட்ட பயங்கரமான கதைகள் தனித்த நிகழ்வுகளாக இருந்தாலும், ஒவ்வொரு பெற்றோரும் உணரும் உண்மை இதுதான். டிஜிட்டல் உலகில் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் இடையே அமைதியான ஒரு போராட்டம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் இரு தரப்பினரின் வாதங்களும் முக்கியமானவை. ‘குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்’ என்பதும், ‘அவர்களை எந்த விலை கொடுத்தும் பாதுகாக்க வேண்டும்’ என்பதும் தனித்தனியாக பார்க்கப்படுவது காலாவதியானது.

நம் குழந்தைகள் வளர்ச்சி அடைய வேண்டும், புதிய திறன்களைக் கற்க வேண்டும், தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் நிறைந்த இந்த காலத்தில், இந்த எளிய விருப்பம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது.

பல இளைஞர்கள் டிஜிட்டல் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஆன்லைனில் இருப்பது தூக்கத்தைக் குலைக்கிறது, கவனத்தைச் சிதறடிக்கிறது, மற்றும் குடும்பத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்துகிறது. இரவு உணவுக்கு அழைக்கும்போது ‘இன்னும் ஒரு நிமிடம்’ என்ற பதிலைத் திரும்பத் திரும்பக் கேட்பது மனதை வருத்துகிறது. திரை நேரம் இனி வெறும் பொழுதுபோக்கு அல்ல. இது வாழ்க்கை முறையையே மாற்றும் சக்தி கொண்டது.

மேலும், நாம் காண முடியாத அவர்களின் டிஜிட்டல் உலகம் உள்ளது. யாருடன் உரையாடுகிறார்கள்? எந்த வகையான உள்ளடக்கம் அவர்களின் சிந்தனைகளை, சுய மதிப்பை வடிவமைக்கிறது? நாம் அருகில் இல்லாதபோது எந்த மதிப்புகளை உள்வாங்குகிறார்கள்? என்பதைப் பற்றி கவலைப்படுகிறோம்.

டிஜிட்டல் உலகம் பல வெளிப்பாடுகளைக் கொண்டு வருகிறது. சில நேரங்களில் வயதுக்கு மீறிய உள்ளடக்கம், சில நேரங்களில் தீய நோக்கம் கொண்ட அந்நியர்கள், சில நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சக உறவுகள். இவற்றில், ஒரு பெற்றோருக்கு மிகவும் வேதனை தரும் அனுபவம் உதவியற்ற நிலையில் இருப்பதுதான். நம்பிக்கையை இழக்காமல் எப்படி உதவுவது என்று தெரியாமல் தவிப்பது.


கட்டுப்பாட்டுக்குப் பதிலாக பங்கேற்பின் அவசியம்

பெற்றோர்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த வேண்டியதில்லை, அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும். பெரும்பாலான டிஜிட்டல் தளங்கள் இதுவரை பெற்றோர்களுக்கு குழந்தைகளின் இணைய பயணத்தில் பங்கேற்க போதுமான வழிகளை வழங்கவில்லை.

இன்றைய உரையாடல் கட்டுப்பாட்டிலிருந்து பங்கேற்புக்கு மாற வேண்டும். குழந்தைகள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் இருக்கிறார்கள், எனவே கேள்வி அவர்களை அதிலிருந்து விலக்குவதல்ல, மாறாக, அவர்களுடன் இணைந்து அதை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையான திறன்களை வழங்க வேண்டும்.

TikTok இன் ‘Family Pairing’ போன்ற அம்சங்கள் சரியான திசையில் ஒரு முன்னேற்றம். இது கண்காணிப்புக் கருவி அல்ல, மாறாக, பெற்றோர் மற்றும் குழந்தை இடையே பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்க உதவுகிறது. ‘Screen Time Management’ போன்ற அம்சங்கள் திரை நேரத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. அதிக திரை நேரம் சோர்வு, தூக்கக் குறைபாடு, மற்றும் மன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேரடி செய்தி அனுப்புதல் அல்லது Duet மற்றும் Stitch போன்ற அம்சங்களை கட்டுப்படுத்துவது, குழந்தைகளை ஆபத்தான தொடர்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த அம்சங்கள் குழந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக பெற்றோர்கள் அவர்களுடன் ஈடுபட ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இவை குழந்தைகளின் டிஜிட்டல் பயணத்தில் பெற்றோர்களுக்கு பங்கேற்க உதவி, அவர்களை வழிநடத்த வழிவகுக்கின்றன.

பெற்றோரை அதிகாரப்படுத்துதல்: பொறுப்பின் புதிய யுகம்

சமூக ஊடகங்கள் நம்மிடமிருந்து மறையப் போவதில்லை. அவை தொடர்ந்து இருக்கும். ஆனால் அவை பொறுப்புணர்வுடனும், தொலைநோக்குப் பார்வையுடன், அனுதாபத்துடனும் பரிணமிக்க வேண்டும். TikTok போன்ற தளங்கள் முழுமையானவை அல்ல, மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் எப்போதும் இருக்கும். TikTok இன் Family Pairing போன்ற அம்சங்கள் சரியான திசையில் ஒரு முன்னேற்றமாகும். தளங்கள் இனி வெறும் பொழுதுபோக்கிற்கான இடங்கள் அல்ல, மாறாக, இளைஞர்கள் வளரும் மற்றும் நவீன உலகின் சிக்கல்களை வழிநடத்தும் இடங்கள்.

என்பது தவிர்க்க வேண்டிய சுமை அல்ல, முதிர்ச்சியின் அடையாளம். நமது குழந்தைகளுக்கு வளர்வதற்கான சுதந்திரமும், பாதுகாப்பும் தேவை. இரண்டும் சாத்தியமானால், நாம் சிறந்த டிஜிட்டல் உலகத்தை உருவாக்குவோம்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற மற்ற தளங்களும் தங்கள் பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காக முன்வர வேண்டும். பெற்றோர்களாக, நாம் இந்த டிஜிட்டல் பயணத்தை வடிவமைப்பதில் செயலில் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும், வெறும் பார்வையாளர்களாக அல்ல.

இப்போது சமநிலையை ஏற்படுத்தாவிட்டால், நமது குழந்தைகள் பாதுகாப்பற்ற, வளர்ச்சி குன்றிய ஒரு டிஜிட்டல் உலகை உரிமையாக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. நமது குழந்தைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும், நாம் ஒன்றாக உருவாக்க விரும்பும் உலகத்திற்காகவும் தற்போது செயல்பட வேண்டும்.


எழுத்தாளர் – இந்திக டி சொய்சா (இலங்கை கணினி சங்கத்தின் உதவித் தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close