யுனைற்றட் வென்சர்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்தின் அதிபர் கலாநிதி ஹிரான் பீட்டருக்கு சமூக சேவை தூதுவர் விருது
நாட்டின் முன்னணி தர மதிப்பீட்டு அமைப்பான MUGP சர்வதேச அமைப்பு வழங்கும் “சமூக சேவை தூதுவர்” விருது யுனைற்றட் வென்சர்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்தின் அதிபர் கலாநிதி ஹிரான் பீட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து திரு ஹிரான் மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். யாதேனும் ஒரு நபர் அல்லது நிறுவனம் சமூக நலன் கருதி ஆற்றிய சேவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் கருத்தாய்வு மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் சிறந்த தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கலாநிதி ஹிரான் பீட்டர் எவ்வித ஆராவாரமுமின்றி இலங்கை மக்களுக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வகையில் மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விருதுக்கு மேலதிகமாக சிறந்த கட்டுமான நிறுவனத்திற்கான விருதையும் திரு ஹிரான் பீட்டர் தலைமை வகிக்கும், ராஜகிரியவில் அமைந்துள்ள யுனைற்றட் வென்சர்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனம் வென்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான மேற்படி நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவங்களோடு குடிமனைகள் மற்றும் கட்டுமானத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு சேவையாற்றி வருகின்றது. சேவை பெறுநர்களுக்கு தரமான சேவையினை வழங்குவதோடு, ஏராளமானோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியமையே மேற்படி விருது வழங்கப்பட்டமைக்கான காரணமாகும். அத்தோடு, இந் நிறுவனமானது, நாடெங்கிலும் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த ஏராளமானோருக்கு தமது சிறப்பான சேவையினை வழங்கி மக்களின் பாராட்டையும் அபிமானத்தையும் வென்றுள்ளது. இளம் வயது தொழில்முயற்சியாளரான கலாநிதி ஹிரான பீட்டர் மேற்படி விருதுகளை வென்றுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்த விருதை தனக்கு கிடைத்த பாராட்டு என்பதை விடவும் இந் நாட்டு இளம் சந்ததியினருக்கு மேலும் சேவையாற்றுவதற்கான தூண்டுதலை கொடுத்த விடயமாகவே தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார். மேலும், இந்த விருதானது, தமது தொழில்முயற்சியை மேலும் தரத்துடனும் சமூக சேவைகள் பணியை இதை காட்டிலும் பரந்தளவிலும் மேற்கொள்வதற்கு மேலும் பலம் சேர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.