தனது 32 ஆண்டுகால வரலாற்றில், 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருவாயைப் பதிவு செய்த Chevron Lanka நிறுவனம்
கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமான Chevron Lubricants Lanka PLC (“Chevron Lanka”) (LLUB), இலங்கையில் தனது 32 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக உயர்ந்த வருவாயை 2025 ஆம் ஆண்டில் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தைக்கு வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு இடைக்கால நிதி அறிக்கைகளின்படி, அதன் மொத்த வருமானம் 24.39 பில்லியன் ரூபாவாக அமைந்ததுடன், அதன் நிகர இலாபம் முதல் முறையாக 4 பில்லியன் ரூபா என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.
ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான காலப்பகுதியில் ஈட்டப்பட்ட இந்த சாதனை வருவாயானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை அளவில் ஏற்பட்ட வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியினால் உந்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரு பங்கிற்கு 16 ரூபா இலாபப்பங்கு வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவாக 95% இலாபப்பங்கு வழங்கல் விகிதமும் (அதாவது முழு ஆண்டு வருமானத்தில் 95% பங்குதாரர்களுக்கு வழங்கப்படுதல்) எட்டப்பட்டுள்ளது.
Business Today இதழின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தரவரிசையின்படி, Chevron Lanka நிறுவனம் இலங்கையின் சிறந்த 40 நிறுவனங்களுக்குள் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. அத்துடன், சொத்துக்களின் மீதான வருவாய், பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் மற்றும் சொத்து பயன்பாடு போன்ற முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் LMD தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு வர்த்தக நாமமான Caltex®, இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமமாகத் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகிறது. மேலும், அண்மைய சாதனையாக, இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான Best Employer Awardsஇல் முதல் 15 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் Chevron Lanka நிறுவனம், லூப்ரிகன்ட்ஸ் (உயவு எண்ணெய்) சந்தையில் முன்னிலை வகிக்கிறது. தற்போது சந்தையில் 35 போட்டியாளர்கள் உள்ள போதிலும், கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கையில் மிகப்பரந்த லூப்ரிகன்ட்ஸ் விநியோக வலையமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ள Chevron Lanka, Caltex, Havoline® மற்றும் Delo® ஆகிய பிராண்டுகளின் கீழ் உயவு எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் (greases) வகைகளை சந்தைப்படுத்துகிறது. மேலும், Chevron Lanka இலங்கையில் ஒரு லூப்ரிகன்ட் கலவை ஆலையையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய ஏற்றுமதி சந்தைகளுக்கும் எண்ணெய்களை வழங்கி வருகின்றது.

