இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH)முதலாவது தேசிய ஒன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவு
நாட்டின் தனியார் சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியான இலங்கை தனியார் மருத்துவமனை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலைய சங்கத்தின் (APHNH) முதலாவது தேசிய ஒன்றுகூடல் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. “போட்டிக்கு அப்பால் – ஒத்துழைப்பின் மூலம் முன்னோக்கி” எனும் தொனிபொருளில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல்வேறு மருத்துவமனைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 150 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் போது பங்கேற்ற விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய APHNH தலைவர் திரு. ரவீன் விக்கிரமசிங்க, இலங்கையில் 55% வெளிநோயாளர் பராமரிப்பு மற்றும் 5% உள்நோயாளர் பராமரிப்பை வழங்கும் தனியார் சுகாதாரத் துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். பொது சுகாதார அமைப்புடன் இணைந்து தேசிய சுகாதாரத் தரங்களை உயர்த்துவதற்கு இத்துறைக்குள் ஒற்றுமையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சங்கத்தின் நிர்வாகச் சேவையின் அங்கத்தவர்களான கலாநிதி ஆனந்த குருப்புஆரச்சி (முன்னாள் தலைவர்), டாக்டர் சந்தமாலி வீரசிங்க (செயலாளர்), டாக்டர் விபாஷ் விஜேரத்ன (உப தலைவர்), மஹனில் பெரேரா (உப தலைவர்), ஆகியோரின் பங்கேற்புடன் அறிவார்ந்த கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது. அதில் சங்கத்தின் பணிப்பொறுப்புகள், இத் துறையின் போக்குகள் மற்றும் இலங்கை தனியார் சுகாதாரச் சேவைகள் ஒழுங்குபடுத்தல் பேரவையுடன் இணைந்து சங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. அறிவார்ந்த கலந்துரையாடலை வழிநடத்திய திரு நிசாந்த ஜயமான்ன (உதவிச் செயலானர்) கருத்து தெரிவிக்கையில் தேசிய சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு சங்கம் மகத்தான பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்த ஒன்றுகூடல், உறுப்பினர்களிடையே தொடர்பு, ஆதரவு மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு மைய தளமாகச் செயல்பட வடிவமைக்கப்பட்ட APHNH-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தையும் (www.aphnh.com) அறிமுகப்படுத்தியது. முன்னாள் தலைவர்களான பேராசிரியர் லால் சந்திரசேன, கலாநிதி லக்கித் பீரிஸ், கலாநிதி ஆனந்த குருப்புஆரச்சி, டாக்டர் ருவான் சேனாதிலக்க ஆகியோர் சங்கத்துக்கும் தனியார் சுகாதாரத்துறைக்கும் செய்துள்ள சேவையினை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நன்றியுரையை நிகழ்த்திய சங்கத்தின் பொருளாளர் டாக்டர் சத்துர வீரசிங்க இத்துறையின் தர நியமங்களை மேம்படுத்துவதற்கு நாடெங்கிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் தமது சங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வு, தனியார் சுகாதாரத் துறைத் தலைவர்களிடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்திய இரவு விருந்துடன் நிறைவடைந்தது.

