
NUCARS 2025 சர்வதேச செயலமர்வை இலங்கையில் நடாத்தும் வாய்ப்பை பெற்ற ANC கல்வி நிறுவனம்
கடந்த 22 ஆண்டுகளாக நாட்டின் உயர் கல்வித் துறையில் முன்னணியில் திகழும் ANC கல்வி நிறுவனம் 2004 ஆம் ஆண்டிலிருந்து நோர்த்வுட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பு பாடநெறிகள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி நீண்ட கால கூட்டிணைவின் விளைவாக, சர்வதேச மட்டத்திலான செயலமர்வாக நடைபெறும் நோர்த்வுட் பல்கலைக்கழகத்தின் Computer Automotive Retail Simulation – NUCARS செயலமர்வை இலங்கையில் நடாத்தும் வாய்ப்பை ANC நிறுவனம் பெற்றது. இது இலங்கையின் கல்விச் சிறப்பிலும் உலகளாவிய இணைப்பிலும் ஒரு தனித்துவமான மைல்கல்லாகும். ANC நிறுவனத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் NUCARS 2025 செயலமர்வில் பங்கேற்றதோடு அதன் மூலம் பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அவர்கள் பெற்றனர். இது, உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப சர்வதேச அரங்குகளில் தங்கள் அறிவையும் அனுபவங்களையும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய மாணவர்களை உருவாக்கும் ANC இன் திறனை வெகுவாக நிரூபிக்கும் நிகழ்வாக அமைந்தது. NUCARS 2025 செயலமர்வு ஏப்ரல் மாதம் 7முதல் 11 வரை ANC Education நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா, இலங்கை போன்ற பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான மாணவர்கள், இராஜதந்திர அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். NUCARS 2025 சர்வதேச ஒத்துழைப்பு, வணிக கற்றல் மற்றும் கலாச்சார பரிமாற்றம் போன்ற பல விடயங்கள் தொடர்பாக NUCARS 2025 செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. மாறிவரும் வாகன விற்பனைத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலோபாயங்கள் தொடர்பான அறிவைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு உதவும் NUCARS 2025 என்பது இணையத்தை அடிப்படையாக கொண்டதொரு சர்வதேச மூலோபாயத் தளமாகும்.
செயற்பாட்டு கற்றல் கருவியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இத் தளம் வணிக வாய்ப்புகளுடன் இணைந்து உற்பத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள், நிதி மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளுடன் தொடர்புடைய நடைமுறை அறிவை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. NUCARS 2025 செயலமர்வின் போது பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன் இணைந்து சந்தை நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதற்கும், வெவ்வேறு சந்தைகளுக்கேற்ற மூலோபாயங்களை திட்டமிடுவதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இச் செயலமர்வில் தற்போதைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வணிக உலகின் வளர்ச்சிக்கு இன்றியமையாத பண்புகளான குழுவாக இயங்குதல், பன்முக கலாச்சார புரிதல் மற்றும் சமூகத் திறன்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. கலிபோர்னியாவின் டோரன்ஸில் டொயோட்டா மோட்டார் விற்பனை நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட NUCARS செயலமர்வு, ஆரம்பத்தில் அந் நிறுவனத்தின் முகாமைத்துவப் பயிலுனர்கள் மற்றும் விற்பனை முகவர் பணியாட்டொகுதியினரை பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. 1990 களின் முற்பகுதியில் நோர்த்வுட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இது சர்வதேச அளவில் பிரபலமானது. அப்போது ICARS என அழைக்கப்பட்ட முதலாவது சர்வதேச NUCARS செயலமர்வு 1997 இல் ஜெர்மனியின் கீஸ்லிங்கனில் நடைபெற்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா போன்ற பல பிராந்தியங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இதற்கு முன்னர் NUCARS செயலமர்வுகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளன. இதனை பல்வேறு நாடுகளில் நடாத்துவதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய புரிதலைப் பெற முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.