October 26, 2025
AI பயன்பட்டால் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு அழுத்தம் அதிகரிப்பு: Sophos ஆய்வில் தகவல்
செய்தி

AI பயன்பட்டால் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு அழுத்தம் அதிகரிப்பு: Sophos ஆய்வில் தகவல்

Sep 19, 2025

ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு துறையில் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உலகளாவிய முன்னணி பாதுகாப்பு தீர்வு நிறுவனமான Sophos இன் ஐந்தாவது ஆண்டு அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 86% இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. அதிகரித்த அச்சுறுத்தல்கள், வளப் பற்றாக்குறை மற்றும் சிக்கலான விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

2025 அறிக்கை, செயற்கை நுண்ணறிவு இணையப் பாதுகாப்பில் இரண்டு வகையான தாக்கத்தை ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. ஒருபுறம் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் பாதுகாப்பு கருவிகள் மன அழுத்தம் தொடர்பான சில பிரச்சினைகளைக் குறைக்க உதவுகின்றன. மறுபுறம், ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாத செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவது இணையப் பாதுகாப்பு முயற்சிகளை சிக்கலாக்குகிறது.

அழுத்தம் காரணமாக நிறுவனங்கள் ஒரு வாரத்தில் ஒரு ஊழியருக்கு சராசரியாக 4.6 மணிநேரத்தை இழக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம். 85% நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் தங்கள் இணையப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

APJ, Sophos இன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி Aaron Bugal

இதுதொடர்பில் Sophos நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் நாட்டுக்கான தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி Aaron Bugal கருத்து தெரிவிக்கையில், அதிகரித்த அச்சுறுத்தல்கள், ஒழுங்குமுறை கோரிக்கைகள் மற்றும் குறைந்த வளங்கள் ஆகியவை பல குழுக்களுக்கு இணையப் பாதுகாப்பை நிலையற்றதாக மாற்றிவருகின்றன. இந்த ஆண்டின் கண்டுபிடிப்புகள் நாங்கள் களத்தில் கண்டதை உறுதிப்படுத்துகின்றன. இணையப் பாதுகாப்பு அழுத்தமும் களைப்பும் வெறும் செயல்பாட்டு கவலைகள் மட்டுமல்லஅவை கலாச்சாரம், உத்தி மற்றும் மனித சவால்கள் சார்ந்தவை. செயற்கை நுண்ணறிவு கருவிகள், சரியாகப் பயன்படுத்தப்படும்போது, செயல்திறனை விரிவுபடுத்தி விரைவான சம்பவ பதிலளிப்பை இயலச் செய்வதன் மூலம் நிவாரணம் அளிக்கலாம். ஆனால் ஊழியர்களால் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத, ஒழுங்குபடுத்தப்படாத செயற்கை நுண்ணறிவு கருவிகளின் எழுச்சி பல நிறுவனங்கள் தயாராக இல்லாத புதிய அபாயங்களை ஏற்படுத்துகிறது.”

மேலும், “மோசடி மின்னஞ்சல்களுக்கு அப்பால் பாதுகாப்பு விழிப்புணர்வை விரிவுபடுத்தும் புதிய காலத்தை நாம் கண்டுவருகிறோம். செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் மக்கள் உணர்திறன் தரவுகளை எவ்வாறு பயன்படுத்தி பகிர்கிறார்கள் என்பதையும் இது உள்ளடக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைச் சுற்றிய நிர்வாகமும் தெளிவான எல்லைகளும் அவசியம்.” என தெரிவித்தார்.

இந்த அறிக்கை, இணையப் பாதுகாப்பு அழுத்தம் வெறும் தொழில்நுட்ப பிரச்சனை மட்டுமல்ல, ஒரு வணிக பிரச்சினையும் கூட என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல, மன அழுத்தம் உற்பத்தித்திறனை பாதிக்கிறது. சம்பவ பதிலளிப்புக்கு இடையூறு செய்கிறது. ஊழியர் தக்கவைப்பைப் பாதிக்கிறது மற்றும் தரவு உடைப்புகளுக்கு வழிவகுக்கிறது. 31% நிறுவனங்கள் மன அழுத்தம் ஒரு தரவு உடைப்புக்கு காரணமாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இரு முனைகளை கொண்டுள்ளது. ஒருபுறம், 56% நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் பாதுகாப்பு கருவிகள் மன அழுத்தத்தைக் குறைத்து சிக்கல்களை விரைவாக கையாள உதவுவதாகக் கூறுகின்றன. மறுபுறம், அங்கீகரிக்கப்படாத “மறைமுக செயற்கை நுண்ணறிவு” கருவிகளின் பயன்பாடு பெரும் கவலையாக மாறிவருகிறது. 72% நிறுவனங்கள் முறையான கொள்கைகளைக் கொண்டிருந்தபோதிலும், 46% நிறுவனங்களில் ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாத கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 62%, சிங்கப்பூரில் 60%, ஜப்பானில் 47% என இந்த எண்ணிக்கை அதிகம். மேலும், 38% நிறுவனங்கள் எந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறியவில்லை. 35% எந்தத் தரவுகள் அணுகப்படுகின்றன என்பது குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளன. 31% ஏற்கனவே பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு வணிக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்படும் போது, வெறும் கொள்கைகளை வரையறுப்பதோடு மட்டுமல்லாமல் கடுமையான கண்காணிப்பையும் உறுதிசெய்யும் வலுவான நிர்வாக கட்டமைப்புகள் மிகவும் அவசியம் என இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close