
26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS
உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது.
மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க நிகழ்வு, 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள BMICHஇல் நடைபெற்றது.
MAS நிறுவனம், இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில், ஒட்டுமொத்த விருதுகள் மற்றும் துறை சார்ந்த விருதுகளைப் பெற்று, கௌரவிக்கப்பட்டவர்களிடையே தன்னைத் தனித்துவப்படுத்தியது. பெற்ற ஒட்டுமொத்த விருதுகளில், அன்றைய தினத்தின் முக்கிய விருதான “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதுடன், “ஆண்டின் அதிகபட்ச வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈட்டியவர்”, “தயாரிப்பு பன்முகப்படுத்தலில் சிறந்த ஏற்றுமதியாளர்”, “ஏற்றுமதியில் நிலையான வளர்ச்சிக்கு பங்களித்தவர்”, “பிராந்தியங்களிலிருந்து ஏற்றுமதி விநியோக சங்கிலிக்கு பங்களித்தவர்” மற்றும் “புதிய சந்தைகளில் சிறப்பாக செயல்படும் ஏற்றுமதியாளர்” ஆகியவை அடங்கும். மேலும், MAS நிறுவனம் “சிறந்த ஏற்றுமதியாளர் – ஆடை – பெரிய பிரிவு”க்கான துறை சார்ந்த விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
“இன்றைய நமது சாதனை, இலங்கையில் உள்ள எங்கள் 70,000 பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பால் சாத்தியமானது. அவர்களின் ஆர்வமும், மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் திறனுமே, எங்கள் நிறுவனத்தை முன்னோக்கி நகர்த்துகிறது. உற்பத்தி தளத்திலிருந்து எங்கள் வடிவமைப்பு மையங்கள் வரை, புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் சிறந்த தரம் ஆகியவற்றிற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, இலங்கையின் உற்பத்தி திறன்களின் சிறந்த ஆற்றலை உள்ளடக்கியுள்ளதை பிரதிபலிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதிலும், நெறிமுறை மற்றும் உலகத் தரம் வாய்ந்த உற்பத்திக்கான முன்னணி மையமாக இலங்கையின் நற்பெயரை நிலைநிறுத்துவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என MAS Holdingsஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) நடத்தும் ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வு, இலங்கையில் ஏற்றுமதி சிறந்து விளங்குவதற்கான மிக உயரிய அங்கீகாரத்தை குறிக்கின்றன. இது நாட்டின் ஏற்றுமதித் துறை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த ஏற்றுமதியாளர்களை கௌரவிப்பதற்கும், அவர்களை வெளிப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
MAS நிறுவனத்தின் வணிகத் துறைகள் மிக சமீபத்தில் 2022/23 மற்றும் 2021/22 நிதியாண்டுகளுக்கான “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.