லங்கா பிறீமியர் லீக் 2026 இன் உத்தியோகபூர்வ ஊடக மற்றும் ஒளிபரப்பு பங்காளராக SLT-MOBITEL PEOTV ஒப்பந்தம்
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெவுள்ள லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் உத்தியோகபூர்வ மற்றும் பிரத்தியேக ஊடக ஒளிபரப்பு Exclusive Media & Broadcast Partner) SLT-MOBITEL PEOTV தொலைக்காட்சி அலைவரிசை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இத்தொடரின் ஏற்பாட்டாளர்களான IP நிறுவனத்திற்கும், இலங்கையின் முன்னணி இணைய நெறிமுறை தொலைக்காட்சி (IPTV) சேவை வழங்குனரான PEOTV நிறுவனத்திற்கும் இடையில் அண்மையில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்தக் கூட்டாண்மையின் மூலம், இலங்கை முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் முழுத் தொடரையும் PEOTV, PEO MOBILE மற்றும் டிஜிட்டல் தளங்கள் உட்பட அனைத்து PEOTV தளங்களின் ஊடாகவும் நேரலையாக பார்த்து ரசிக்க முடியும். இப்போட்டிகள் அனைத்தும் துல்லியமான HD தரத்தில் ஒளிபரப்பப்படவுள்ளதால், ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாகப் பார்ப்பது போன்றவொரு அதிஉயர் காட்சி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தக் கூட்டாண்மையின் கீழ், ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமைகளுக்கான பிரத்தியேக பங்காளராக PEOTV செயல்படவுள்ளது. இதன் மூலம், பல்வேறு தளங்களின் வாயிலாக இத்தொடரின் உள்ளடக்கங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க IPG நிறுவனத்துடன் இணைந்து PEOTV பணியாற்றவுள்ளது. மேலும், இலங்கையிலும் ஏனைய பிராந்தியங்களிலும் இத்தொடரை இன்னும் பரந்த அளவில் கொண்டு சேர்ப்பதற்காக, ஏனைய தரைவழி ((Terrestrial) மற்றும் டிஜிட்டல் ஊடகப் பங்காளர்களுக்கும் PEOTV அழைப்பு விடுக்கவுள்ளது. இப்போட்டித் தொடர் 2026 ஜூலை 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், வீரர்கள் வரைபு 2026 ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
உள்நாட்டு ரசிகர்கள் தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, நேரலை விளையாட்டு நிகழ்வுகள், செய்திகள், தகவல்-பொழுதுபோக்கு, சிறுவர் நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளைப் பார்வையிடும் முறையையே மாற்றி அமைப்பதில் SLT-MOBITEL PEOTV முக்கியப் பங்காற்றியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளை அதிஉயர் HD தொழில்நுட்பத்தில் வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய தொலைக்காட்சி அலைவரிசையாக, அதிநவீன தொழில்நுட்ப ஒளிபரப்பு கட்டமைப்பின் ஊடாக லங்கா பிறீமியர் லீக் தொடரை பெருந்திரளான மக்களிடம் கொண்டு சேர்க்க PEOTV தயாராக உள்ளது. இது நாட்டின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஒளிபரப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டாண்மை குறித்து SLT-MOBITEL PEOTV இன் தலைமை அதிகாரி ருச்சிர வீரகோன் கருத்துத் தெரிவிக்கையில், “லங்கா பிறீமியர் லீக் தொடரின் பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக, IPG நிறுவனத்துடன் இணைவதில் SLT-MOBITEL PEOTV பெருமிதம் கொள்கிறது. இலங்கையின் முன்னோடி IPTV சேவை வழங்குநர் என்ற வகையில், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு உயர்தர நிகழ்ச்சிகளையும், சிறந்த காட்சி அனுபவத்தையும் வழங்குவதே எப்போதும் எங்களின் முதன்மை நோக்கமாகும். எங்களது ஒருங்கிணைந்த தளங்களின் மூலம், இன்னும் பரந்த அளவிலான ரசிகர்களைச் சென்றடைவதோடு, அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் வலுவான, வசதியானதொரு காட்சி அனுபவத்தை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
இந்தக் கூட்டாண்மை குறித்து IPG Global நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “லங்கா பிறீமியர் லீக் தொடரானது, ஒரு போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு தளமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு வலுவான ஒளிபரப்பு கூட்டாண்மைகள் மிக முக்கியமானவையாகும். இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையில் மிகவும் நம்பகமான மற்றும் முன்னோடி தளமாக விளங்கும் SLT-MOBITEL PEOTV உடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்போட்டித் தொடரை இன்னும் சிறந்த தரம், பரந்த அளவிலான அணுகல் மற்றும் தடையற்ற ஒளிபரப்புடன் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இந்தக் கூட்டாண்மை எங்களுக்கு உதவும்.” என்றார்.
இத்தொடரின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் வலுப்படுத்தக்கூடிய பங்காளர்களுடன் IPG நிறுவனம் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், “உயர்தர தயாரிப்பு, பரந்த ஒளிபரப்பு வசதி மற்றும் ரசிகர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் துணையோடு, லங்கா பிறீமியர் லீக் தொடரை வணிக ரீதியாக வலுவான மற்றும் அதிகளவிலானோரால் ரசிக்கப்படும் ஒரு தொடராக மாற்றுவதே எங்களது நோக்கமாகும். இந்த நிலையில், PEOTV எங்களது பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக இணைந்துள்ளதால், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மேம்பட்டதொரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியுமான சமந்த தொடன்வெல கருத்து தெரிவிக்கையில், “லங்கா பிறீமியர் லீக் தொடரை இன்னும் பல ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முக்கிய படியாக, IPG நிறுவனத்திற்கும் SLT PEOTV க்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வரவேற்கிறது. PEOTV இன் IPTV, OTT மற்றும் பன்முகத் தளங்களின் (multi-platform) மூலம், இலங்கை முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டித் தொடரை தடையின்றியும், மிக இலகுவாகவும், உயர்தரத்துடனும் கண்டுகளிக்க முடியும். முன்னனி கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக லங்கா பிறீமியர் லீக்கின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இத்தகைய வலுவான ஒளிபரப்புக் கூட்டாண்மைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.” என அவர் கூறினார்.
இலங்கையின் முன்னணி நட்சத்திரங்களையும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களையும் ஒன்றிணைக்கும் விறுவிறுப்பான டி20 வடிவத்திலான லங்கா பிறீமியர் லீக் தொடரானது, நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், விளையாட்டுப் பொழுதுபோக்கிற்கும் அப்பால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

