ட்ரென்டெக் பிரைவேட் லிமிட்டற் நிறுவனத்தினால் வலுவூட்டப்பட்ட தேசிய காற்று தர வலைச் செயலி அங்குரார்ப்பணம்
இலங்கையில் காற்று தர முகாமைத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய காற்று தர வலைச் செயலி” ஐ அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க பட்டபெந்திகே மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்போர்கூடத்தில் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று நடைபெற்றது. மேற்படி தேசிய காற்று தர செயலிக்கான பூரண நிதிப் பங்களிப்பை வாகனப் புகை பரிசோதித்தல் நம்பிக்கை நிதியம் வழங்கியிருந்தது. இலங்கையின் முன்னணி மென்பொருள் பொறியியல் நிறுவனமான ட்ரென்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினால் மேற்படி செயலி அபிவிருத்தி செய்யப்பட்டு வலுவூட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, மேலதிகச் செயலாளர் டபிள்யூ.டி.எஸ்.சி. வெலிவத்த, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.பி. கபில ராஜபக்ஷ, ட்ரென்டெக் தனியார் கம்பனியின் தலைமை நிர்வாக அதிகாரி இமால் பெரேரா, பணிப்பாளர் கிஹான் விஜேசிங்க உள்ளிட்ட நிறுவனத்தின் பொறியியலாளர்களும் சுற்றாடல் முன்னோடி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் முன்னோடி மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பங்குதாரர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர், மேலும் நிகழ்வின் தனித்துவத்தை பறைசாற்றும் வகையில் துறை சார்ந்த அறிஞர்கள் இருவரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இந்த வலைத்தளத்தை www.aq.cea.lk இல் அணுகலாம்.

