
BYD வாகனங்களின் இறக்குமதி தொடர்பாக John Keells CG Auto (Pvt) Limited வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
இலங்கையில் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG) நிறுவனம், 2025 ஜூலை 29 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக, 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி இடைக்கால நிவாரணம் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக பொதுமக்களுக்கு தெரிவிக்கிறது.
ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG) நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கோரியபடி, வாகனங்களை விடுவிப்பதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டதன் பின்னர், இலங்கை சுங்கத் திணைக்களம் குறித்த வாகனங்களை பிணையான ஒரு வங்கி உத்தரவாதத்திற்கு உட்பட்டு விடுவிக்க இணங்கியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் சட்ட விதிமுறைகள், சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப வாகன மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை வடிவமைப்பது பொதுவான வழக்கமாகும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். உதாரணமாக, BYD ATTO 3 வாகனமானது ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு 150 KW திறன் கொண்ட மோட்டாருடனும், சிங்கப்பூர், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு 100 KW திறன் கொண்ட மோட்டாருடனும் தயாரிக்கப்படுகிறது. இந்த வாகன மாதிரிகள் நிலையான தொழில்நுட்ப தரநிலைகளின்படி தயாரிக்கப்படுவதோடு, மோட்டார் திறன் தொடர்பான வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகள் தனித்துவமானவை என்பதுடன், இயக்க அமைப்பின் சிக்கலான தன்மை மற்றும் நிரந்தர காந்த ஒத்திசைவு மோட்டார் போன்ற உற்பத்தியாளரின் கட்டுப்பாடுகள் காரணமாக உற்பத்திக்குப் பின்னர் இவற்றை எவ்விதத்திலும் மாற்ற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியமாகும்.
மேலும், வாகனத் தயாரிப்பாளரின் சான்றிதழ், இலங்கை சுங்கத் திணைக்களத்தால் வாகனத்தை விடுவிக்கச் சரிபார்க்கப்படும் மூல ஆவணமாகச் செயல்படுகிறது. JKCG நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான BYD நிறுவனத்தின் சான்றிதழ்கள் அனைத்தும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே வழக்கமான நடைமுறை என்பதால், இந்தச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டே இதற்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களும் விடுவிக்கப்பட்டன.
ஒரு பொறுப்புமிக்க நிறுவனமாக JKCG நிறுவனம் இறக்குமதி செய்யும் அனைத்து வாகனங்களும் தற்போதுள்ள சட்டதிட்டங்களுக்கு முழுமையாக உட்பட்டவை என்பதை எமது பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறோம். வாகனங்களை விடுவிப்பதற்கும், எதிர்காலத்தில் வரும் அனைத்து வாகனங்களையும் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க விடுவிப்பதற்கு இலங்கை சுங்கத் திணைக்களத்துடன் தொடர்ந்தும் முழுமையாக ஒத்துழைப்போம்.
இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களது வாகனங்களின் நிலை மற்றும் விநியோக காலஅட்டவணை குறித்து தகவல்களை வழங்குவோம். இந்தப் பிரச்சினையை தீர்க்க நாங்கள் முயற்சி செய்த காலகட்டத்தில் வெளிப்படுத்திய புரிந்துணர்வு மற்றும் பொறுமைக்காக அவர்களுக்கு எமது நன்றிகள். தேவைப்படும்பட்சத்தில் மற்ற பங்குதாரர்களுக்கும் கூடுதல் தகவல்களை வழங்க ஆயத்தமாக உள்ளோம்.
மனுதாரர் JKCG-க்காக திருமதி பர்சானா ஜமீல், PC, திரு. ரியாத் அமீன் AAL, திரு. வரண விஜயநாயக்க AAL மற்றும் செல்வி ஷஹானி மேக்கி AAL ஆகியோருடன் ஆஜரானார்.
பிரதிவாதிகள் சார்பில் ASG சுமதி தர்மவர்தனே, PC ஆஜரானார்.