
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு 20% வரி விகிதத்தை உறுதிசெய்த அரசுக்கு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான பரஸ்பர தீர்வை வரியை 20% ஆக குறைத்ததற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது. தென்னை சார்ந்த பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவில், வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வரி விகிதத்தை அனுபவிக்கும் இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் நியாயமாக போட்டியிட இந்த வரிக்குறைப்பு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பெரிதும் உதவும் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.
திறைசேரியின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருக்கும், முதல்கட்ட தீர்வை வரி அறிவிப்பிலிருந்து அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட முயற்சிகளுக்காக நாங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் நியாயமான மற்றும் போட்டித்தன்மை மிக்க வர்த்தக சூழலை உருவாக்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட தீர்வை வரி, உயர் மதிப்புள்ள அமெரிக்க சந்தையில் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்வதுடன், இலங்கையின் தென்னை ஏற்றுமதியாளர்களுக்கு பிராந்திய போட்டியாளர்களுடன் சமமாக போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தொடர்ச்சியான மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் காலநிலை சவால்கள் இருந்தபோதும், இலங்கையின் தென்னை தொழில்துறை வலுவான மீள்திறனை காட்டியுள்ளது. சமீபத்திய ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜனவரி முதல் ஜூன் வரை ஏற்றுமதி 537 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 32% சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த பொருள் ஏற்றுமதியில் 8% சதவீத பங்களிப்புடன், இந்த ஆண்டு ஒரு பில்லியன் டொலர் இலக்கை எட்டும் நிலையில் இத்துறை உள்ளது. நாட்டின் முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக அதன் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், இந்த வளர்ச்சி அதிகரித்த உற்பத்தி அளவுகளால் அல்ல, பெரும்பாலும் உயர் சந்தை விலைகளால் ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிடுவது அவசியம். போட்டி நாடுகள் வேகமாக மீள ஆரம்பிக்கும் நிலையில், இலங்கை தனது போட்டித்தன்மையை தக்கவைக்க உள்நாட்டு விநியோகக் கட்டுப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
எனவே, மூலப்பொருள் கிடைப்பதை உறுதிசெய்ய குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால உத்திகளை விரைவுபடுத்த அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். குறிப்பாக, தென்னை தோட்டங்களில் 85% பங்கு வகிக்கும் சிறு விவசாயிகளுக்கு மலிவான உரம், நீர்ப்பாசன கருவிகள் மற்றும் நடவு பொருட்களை (planting material) வழங்க வேண்டும். நீண்ட கால விநியோக நிலைத்தன்மையை உறுதிசெய்ய, அரசு-தனியார் கூட்டுமுயற்சி மூலம் பயிர் செய்யப்படும் பரப்பளவை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
நிலையான, மலிவான உள்நாட்டு தென்னை விநியோகம் உள்ளூர் வாடிக்கையாளருக்கும் ஏற்றுமதித் துறைக்கும் பயனளிக்கும், இது வாழ்வாதாரங்களை வலுப்படுத்தி, கிராமப்புற மேம்பாட்டை உயர்த்தி, அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்கும்.
இம்மைல்கல்லை எட்டுவதில் பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பிட்ட தயாரிப்பு வகைகளுக்கான வரிக்குறைப்பு அல்லது விலக்குகளுக்கான அரசின் தொடர் முயற்சிகளுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், இலங்கையின் தென்னை துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்துகிறோம்.
இலங்கை மீதான அவர்களது அனுசரணையான அணுகுமுறைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.